“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
”சாதி இருக்கிறது என்பவனும் இருக்கின்றானே” என்று ஜாதியின் இருப்பை கண்டு அதிர்ச்சியுடன் கூறுவார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். அப்படித்தன் இன்றும் இதை சொல்ல வேண்டியுள்ளது ”மன்னராட்சி இருக்கிறது என்பவனும் இருக்கின்றானே”..
மனிதர்களாகிய நாம் சமூகமாக ஒருங்கிணைந்து வாழ் தொடங்கிய காலத்தில் இருந்து குழுவாக, குலமாக என பல விதங்களில் கூடி வாழ்ந்து வருகிறோம். அந்த வரிசையில் மன்னராட்சியின் கீழ் வாழ்ந்து மத்திய காலத்தில் வாழ்ந்து வந்தோம். மன்னரின் முடியே இறுதியான உச்சபட்ச அதிகாரங்களை கொண்டு மக்களின் நலன்களை தாண்டி முடியாட்சியாக அது செயல்பட்டதால் பல போராட்டங்கள் நடத்தப்பட்டு மன்னராட்சிக்கு முடிவு கட்டப்பட்டது. சுதந்திரம், சமத்துவம் என்ற கொள்கை முழக்கங்களோடும், மக்களால், மக்களுக்காக, மக்களே என்ற உன்னத நோக்கங்களோடு இந்த பூமியில் மக்களாட்சி உருவானது. இந்த மக்களாட்சி உருவாக்கத்திற்காக பலரும் போராடி உயிர்நீத்தார்கள். இதற்கிடையில் காலனி ஆட்சியின் கொடூரங்களுக்கு எதிராகவும் போராடி பல நாடுகளில் மக்களாட்சி நிலைநாட்டப்பட்டது. இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளாக மலர்ந்தன. ஆனால், இன்றும் உலகின் சில நாடுகளில் மன்னராட்சி இருக்கின்றது. இன்றும் அவர்கள் முடிசூடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த வகையில் தான் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவும் பார்க்கப்படுகிறது.
முடியாட்சிக்கு எதிராக மக்கள் போராடிக்கொண்டிருக்கும்போதே பிரிட்டன் நாட்டின் அதிகாரப்பூர்வ மன்னராக முடிசூடியிருக்கிறார் மூன்றாம் சார்லஸ். உலகின் மிகப் பெரும்பாலான நாடுகளில் மக்களாட்சி முறையே பின்பற்றப்படும் சூழலில், இன்றும் முடியாட்சியை தொடர்ந்து கொண்டிருக்கிறது இங்கிலாந்து. அந்நாடு நிர்வாக ரீதியாக மக்களாட்சி முறையை கொண்டிருந்தாலும், கொள்கை அளவில் முடியாட்சியைக் கொண்டு இயங்குகிறது.
முடியாட்சிக்கு மக்களின் ஆதரவு இன்றும் இருக்கிறதா என்று கேட்டால், ஆதரவு சரிந்து வருவதையே மன்னராக சார்லஸ் அறிவிக்கப்பட்ட போதே தெரிந்தது. இங்கிலாந்தில் மன்னராட்சியை விரும்பாத பலரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ராணியின் மறைவைத் தொடர்ந்து, அவரின் மூத்த மகனான மூன்றாம் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டார். அப்போதே சார்லஸ் மன்னராவதற்கு எதிராக எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. சார்லசுக்கு செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் போர்க்கொடி தூக்கினர். அவர் மீது முட்டை வீசும் சம்பவம்கூட அரங்கேறியது. 'Not My King' (என்னுடைய மன்னரில்லை) என்ற பதாகைகளை ஏந்தி அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இப்படி எதிர்ப்பு தெரிவித்து போராடுபவர்களை எல்லாம் இங்கிலாந்து காவல்துறை கைது செய்து சிறையில் தள்ளியது. #NotMyKing என்ற ஹேஷ்டேக் ட்விட்டரிலும் டிரெண்டாகி வந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய மன்னரின் அதிகாரங்கள் என்னென்ன?
* அரசர் மூன்றாம் சார்லஸ் பிரிட்டன் அரசத் தலைவராக இருப்பார். ஆனால் அது அதிகாரமற்ற ஓர் அலங்காரப் பதவிதான். அரசியல் ரீதியாக அவர் நடுநிலை வகிப்பார்.
* அரசிடமிருந்து முக்கியமான கையொப்பம் தேவைப்படும் ஆவணங்கள், கடிதங்கள், கூட்டங்களுக்கான விளக்கங்கள் உள்ளிட்டவை அவரது பார்வைக்கு வரும். அதேநேரம், பிரிட்டன் அரசாங்கத்தில் அரசரால் எந்தவொரு முடிவையும் எடுக்க முடியாது. பிரதமரின் முடிவுக்கு மறுப்பு தெரிவிக்கவோ, பொது விவகாரங்கள் குறித்து வெளியில் கருத்து சொல்ல அரசருக்கு அதிகாரம் கிடையாது
* வாரமொருமுறை அரசரை நாட்டின் பிரதமர் பக்கிங்ஹாம் அரண்மனையில் சந்திப்பார். அரசாங்க விவகாரங்களை அவருக்குத் தெரிவிப்பார். இந்த சந்திப்புகள் முற்றிலும் தனிப்பட்டவை. அதில் பேசப்படுவை பற்றி வெளியில் பகிரப்படமாட்டாது.
* பொதுத்தேர்தலில் வெற்றிபெறும் கட்சியின் தலைவர் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அழைக்கப்படுவார். அங்கு அவரிடம் முறையாக ஆட்சி அமைப்பதற்கான அழைப்பு விடுக்கப்படும். பொதுத் தேர்தலுக்கு முன் முறையாக அரசைக் கலைக்கும் பணியையும் அரசர் மேற்கொள்கிறார்.
* ஆண்டின் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தை அரசர் தொடங்கி வைப்பார். பிரபுக்கள் அவையின் சிம்மாசனத்தில் அமர்ந்து அவர் ஆற்றும் உரையில் அரசின் திட்டங்களை அறிவிப்பார்.
* ஒரு சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு, அது சட்டமாக மாறுவதற்கு அரசரால் முறையாக ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும்.
* நாட்டுக்கு வருகை தரும் பிற நாட்டுத் தலைவர்களுக்கு அரசர் விருந்து அளிப்பார். பிரிட்டனில் உள்ள வெளிநாட்டுத் தூதர்கள், தூதரக உயர் ஆணையர்களைச் சந்திப்பார்.
* மன்னர் மூன்றாம் சார்லஸை எந்த சட்ட திட்டங்களும் கட்டுபடுத்தாது. மன்னர் மீது எந்த வழக்கும் பதிய முடியாது. உலகில் எந்த நாடுகளுக்கு வேண்டுமானாலும் அவர் சென்று வரலாம். அதற்கு பாஸ்போர்ட் தேவையில்லை. இங்கிலாந்தில் அவர் கார் ஒட்டுவதற்கு ஓட்டுநர் உரிமம் தேவையில்லை. அவர் போக்குவரத்து விதிகளை மீறினாலும் தண்டிக்க முடியாது. இருப்பினும் இங்கிலாந்து அரசர், அரசியாக இருந்தவர்கள் இதுவரை எந்த சர்ச்சையிலும் சிக்கியதில்லை என்பது வரலாறு.
மூன்றாம் சார்லஸ் பிரிட்டனுக்கு மட்டுமில்லை, அவர் வேறு பல்வேறு நாடுகளுக்கும் அரசத் தலைவராக இருப்பார். கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பப்புவா, நியூ கினியா, ஜமைக்கா, பஹாமாஸ், கிரெனடா, செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், செயின்ட் லூசியா, ஆன்டிகுவா மற்றும் பார்புடா, செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், சாலமன் தீவுகள், துவாலு, பெலிஸ் ஆகிய நாடுகளுக்கும் அவர் அரசத் தலைவராகவும் இருப்பார். அவரது பணிகள் பெரும்பாலும் அந்தந்த நாடுகளில் உள்ள கவர்னர் ஜெனரல்களாலேயே மேற்கொள்ளப்படும்.
21ஆம் நூற்றாண்டிலும் மன்னராட்சி தேவையா என வெகுண்டெழுந்த இங்கிலாந்து மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கி விட்டனர். எனவே இங்கிலாந்து அரச குடும்பம் தங்கள் அதிகாரங்களை துறந்து முழுமையான மக்களாட்சிக்கு தங்கள் தேசத்தை இட்டுச் செல்வதே அவர்களுக்கும் நல்லது; தங்கள் நாட்டுக்கும் நல்லது என்கின்றனர் இங்கிலாந்து மக்கள்.