சர்வதேச அளவிலான பிராண்டட் நிறுவனங்களின் பார்வை இந்திய சந்தையில் இருப்பதைப்போல, சமீபகாலங்களில் தங்கள் நிறுவனங்களில் உயர் பதவிகளில் இந்தியர்களை பணியமர்த்துவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றன. அந்தவகையில், 20 ஆண்டுகளாக உலகை ஆட்டி படைத்துவரும் கூகுள் நிறுவனத்தின் உயர் பதவியில் உள்ள தமிழரின் சாதனைகளை விளக்குகிறது இந்தத் தொகுப்பு...
இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர்கள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பெரும் பங்கு உண்டு. பாரம்பரியம்...கலாசாரம்.. உழைப்பு... விட்டுக்கொடுக்காத உறவுகளின் பிணைப்பு.. எனத் தொடங்கி.. தற்காலத்திற்கு தேவையான தொழில்நுட்பங்களை நன்கு கற்றறிந்து பெரிய பதவிகளை அலங்கரிப்பது வரை...... சரி.. யாரைப் பற்றி தெரிந்துக்கொள்ள போகிறோம் என்ற ஆவல் எழுகிறதா..
தினம் தினம் உலகை கலக்கிக்கொண்டு புத்தம்புதிய செய்திகளை அள்ளி வழங்கி வரும் கூகுள் நிறுவனத்தின் தலைமை பொறுப்பை அலங்கரித்துவரும் நமது மதுரைக்காரர்... தமிழர்... 51 வயதே ஆன சுந்தர் பிச்சையைப் பற்றித்தான்.
கூகுள் நிறுவனத்தில் 20 ஆண்டுகள் பணி நிறைவடைந்ததைப் பற்றி இன்ஸ்டா பக்கத்தில் சுந்தர் பிச்சை பதிவிட்டிருப்பதுதான் பிரபல பத்திரிகைகளில் தலைப்புச் செய்தி. கூகுளில் சேர்ந்த நாளில் இருந்து தனது வாழ்க்கை மாறிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். பல தொழில்நுட்ப மாற்றங்களுடன் தனது தலைமுடியும் பல மாற்றங்களை கண்டுள்ளதாக தெரிவித்துள்ள சுந்தர்பிச்சை, தனக்கு வேலை மீதான காதலும், ஆர்வமும் மாறாமல் அப்படியே இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மதுரையில் பிறந்திருந்தாலும் வந்தாரை வாழவைக்கும் சென்னையில் இரண்டு அறைகள் மட்டுமே உள்ள வீட்டில் வசித்தவர்தான் சுந்தர்பிச்சை. எல்லோரையும்போல பள்ளிப்படிப்பை முடித்த சுந்தர்பிச்சை, கரக்பூர் ஐஐடியில் உலோகப்பொறியியலும், பின்னர் மேலாண்மைப் பட்டமும் பெற்றவர்.
2004ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி கூகுள் நிறுவனத்தில் PRODUCT MANAGERஆக பணியில் அமர்ந்த சுந்தர் பிச்சையின் மேற்பார்வையின் கீழ், கூகுள் குரோம், ஆண்ட்ராய்டு ஆகியவை உருவாக்கப்பட்டன. என்னதான் திறமைசாலியாக இருந்தாலும் நிறுவனத்திற்கு வருமானம் பெற்றுத் தந்தால்தானே பதவியை தக்கவைத்துக்கொள்ள முடியும். அந்தவகையில், கூகுளுக்கு வருமானம் ஈட்டித்தரும் கூகுள் தேடல், வரைபடம், விளம்பரம், யூடியூப் உள்ளிட்ட தயாரிப்புகளிலும் சுந்தர்பிச்சையின் பங்களிப்பு பெரிதாக இருந்ததால் தலைமையின் கவனத்தை பெற்றார்.
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட் நிறுவனத்தின் தலைவர்களாக இருந்த லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோர் விலகிய நிலையில், 2019ஆம் ஆண்டு சுந்தர் பிச்சை இரு நிறுவனங்களுக்கும் ஒரே தலைமை செயல் அதிகாரியாக பதவியை அலங்கரித்து வருகிறார். உதவித்தொகை பெற்று வெளிநாட்டு பல்கலையில் மேலாண்மை பயின்ற சுந்தர் பிச்சை 2022ஆம் ஆண்டு பெற்ற ஊதியம் எவ்வளவு தெரியுமா? 226 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.. அதாவது ஆயிரத்து 854 கோடி ரூபாய்.
படித்து முடித்து வெளியேவரும் பல இளைஞர்களின் கனவும் சுந்தர் பிச்சைபோல, சத்ய நாதெல்லாபோல பெரிய பதவிகளை அலங்கரிக்க வேண்டும் என்பதுதான்.. ஆனால் அதற்கான மெனக்கெடல் என்னவாக இருக்க வேண்டும்.. சாதித்தவர்களை உதாரணமாகக்கொண்டு, தனக்கென உள்ள பாணியில் தனித்துவமாக பணியை திறம்பட செய்தால் நாளை நீங்களும் பெரிய பதவிகளை அலங்கரிப்பீர்கள் என்பதில் ஐயமில்லை.