கொரோனா பொது முடக்கத்திற்குப் பின் உலகம் முழுவதும் பணி நீக்கங்கள் அதிகரித்து வருகின்றன. முன்னணி நிறுவனங்கள் பல்வேறு காரணங்களை காட்டி ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வருகின்றன. இதில் முக்கியமாக ரோபா மற்றும் ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் பேசப்படுகிறது.
மறுபுறம், சமூக வலைதளங்களின் புரட்சி, இன்றைய தலைமுறையினருக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. அதில் தங்களது அனுபவங்களைப் பதிவுகளாகப் பகிர்ந்துவருகின்றனர். இதன்மூலம், சில நிறுவனங்களின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வருகிறது. அந்த வகையில் நிறுவனமொன்றின் சிஇஓ, 99 ஊழியர்களை ஒரே நேரத்தில் பணி நீக்கம் செய்துள்ள செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து Reddit தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, அந்த நிறுவனத்தின் சிஇஓவான பிலாவின், அனைத்து ஊழியர்களையும் ஒரு முக்கியமான கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்புவிடுத்திருந்தார். ஆனால், இந்த கூட்டத்திற்கு மொத்தம் 111 ஊழியர்களில் வெறும் 11 பேர் மட்டுமே வந்துள்ளனர்.
இதனால், கோபமடைந்த அவர் மற்ற அனைவரையும் பணிநீக்கம் செய்வதாக தெரிவித்துள்ளார். அவர் காரசாரமான விமர்சனத்துடன் அனைத்து ஊழியர்களுக்கும் ஸ்லாக் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி பணிநீக்கம் குறித்து அறிவித்துள்ளார். அவர் தன்னுடைய பதிவில், ”இன்று காலை விர்ச்சுவல் கூட்டத்திற்கு வராதவர்களுக்கு இது உங்களுடைய அதிகாரப்பூர்வ நோட்டீஸ்: நீங்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்படுகிறீர்கள். 110 பேரில் 11 பேர் மட்டுமே இன்று காலை வந்திருந்தார்கள். அந்த 11 பேரும் நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றலாம், மற்றவர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள்” என அதில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் கடுமையான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.