அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள தேசிய பூங்காவில் ராட்சத பர்மிய மலைப்பாம்பு ஒன்று சாலையைக் கடக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
பூமியில் வாழும் மிகப்பெரிய பாம்பு இனங்களில் ஒன்று பர்மிய மலைப்பாம்பு. இவ்வகை பாம்புகள் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகமாக காணப்படுகிறது. சதுப்பு நிலங்களில் வாழக்கூடிய இந்த பர்மிய மலைப்பாம்புகள் அதிகபட்சமாக 23 அடி நீளம் மற்றும் 90 கிலோ எடையை கொண்டிருக்கும். இந்த வகை மலைப்பாம்புகளுக்கு நஞ்சு பைகள் இல்லாததால் அவை இரையை இறுக்கமாகச் சுருட்டி, மூச்சுத்திணற வைத்து கொல்லும். பின்பு தன்னுடைய நீண்ட தசைநார்கள் கொண்ட வாயைப் பயன்படுத்தி இரையை விழுங்கும்.
முன்பொரு காலத்தில் அமெரி்க்காவுக்கு செல்லப்பிராணியாகக் கொண்டுவரப்பட்ட இந்த பர்மிய மலைப்பாம்புகளை வனப்பகுதியில் விட்டபின் ஏராளமாகப் பெருகிவிட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக ஃபுளோரிடாவில் உள்ள எவர்க்லேட்ஸ் தேசியப் பூங்கா பகுதியை இந்த பர்மிய மலைப்பாம்புகள் ஆக்கிரமித்துவிட்டதாக அங்குள்ள மக்கள் நீண்ட நாட்களாக புலம்பி வருகின்றனர். ஃபுளோரிடா மாகாணத்தில் எத்தனை பர்மிய மலைப்பாம்புகள் உள்ளன என்ற கணக்கு ஏதும் இல்லை. ஆனால், தோரயமாக ஒரு லட்சம் பாம்புகள்வரை இருக்கலாம் எனத் தெரிகிறது.
ஃபுளோரிடாவின் சுற்றுச்சூழலுக்கு பர்மிய மலைப்பாம்புகள் பெரும் அச்சுறுத்தலாக திகழ்வதாக உள்ளூர் மக்கள் கூறிவருகின்றனர். எனவே பர்மிய மலைப்பாம்புகள் பெருக்கத்தை குறைக்கும் முயற்சியாக ஒவ்வொரு ஆண்டும் ஃபுளோரிடாவில் அந்த பாம்புகளை அகற்றும் போட்டி நடத்தப்படுகிறது. அந்த வகையில் கடந்த 2022ஆம் ஆண்டில் நடந்த போட்டியில் புளோரிடாவின் எவர்க்லேட்ஸில் பகுதியிலிருந்து 230க்கும் மேற்பட்ட பர்மிய மலைப்பாம்புகள் அகற்றப்பட்டன.
இந்த நிலையில் ஃபுளோரிடாவில் உள்ள எவர்க்லேட்ஸ் தேசிய பூங்காவில் ராட்சத பர்மிய மலைப்பாம்பு ஒன்று சாலையைக் கடக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை எடுத்த கிம்பர்லி கிளார்க், பாம்பின் நீளம் சுமார் 15 அடி இருக்கும் எனவும் அதன் நடமாட்டம் குறித்து உள்ளூர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
அந்த வீடியோவில் சாலை ஒன்றில் காரின் முன்பு பாம்பு படுத்துக் கொண்டிருக்கிறது. சாலையை கடக்க முயன்று அங்கே படுத்திருக்கிறது. வாகனத்தின் சத்தத்தை கேட்டவுடன் வந்த திசையை நோக்கி மறுபடியும் செல்கிறது. செல்லும் போது அதன் முழு நீளம் நன்றாக தெரிகிறது. நன்றாக பருத்த உடலும் 15 அடிக்கும் அதிகமான நீளமும் கொண்ட பாம்பு அது. அதனை ஒருவர் தன்னுடைய கேமிராவில் படம் எடுக்கிறார். சாலையை கடந்து புல் தரைக்குள் அந்த பாம்பு சென்றுவிடுகிறது.
தவற விடாதீர்: ”மண்டைல இருந்த கொண்டைய மறந்துட்டனே” - வெற்றிக்களிப்பில் ஆட்டம் போட்ட திருடன்!