அமெரிக்காவில் உணவு டெலிவரி செய்ய வந்த பெண் ஒருவர், டெலிவரி செய்ய வேண்டிய உணவை தன்னுடனே எடுத்துச் செல்லும் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உணவுப்பொருட்களை டெலிவரி செய்யும் ஊழியர்கள், அந்த உணவை திறந்துபார்க்கிறார்கள், உண்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகளை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இது இந்தியாவில் மட்டுமல்லாது பல நாடுகளிலும் வழக்கமானதொரு விஷயமாக இருக்கிறது. இந்நிலையில், இது போன்ற முறைகேடான விஷயங்கள் ஊரடங்கு காலங்களில் அதிகமாக நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக உணவை டெலிவரி செய்யும் ஊழியர்கள் உணவை வாடிக்கையாளர்களின் வீட்டின் முன்வைத்து புகைப்படம் எடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அனுப்ப வேண்டும் என்பது விதிமுறையாக இருக்கிறது. ஆனால் இந்த விதிமுறையைப் பயன்படுத்தி பெண் ஊழியர் ஒருவர் வாடிக்கையாளரை ஏமாற்றும் ஒரு வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் உணவு டெலிவரி செய்யும் தூர்தஷ் நிறுவன ஊழியரான பெண்மணி ஒருவர், வாடிக்கையாளர் ஆர்டர் செய்த உணவு பார்சலை அவரது வீட்டிற்கு கொண்டு செல்கிறார். வாடிக்கையாளர் வீட்டின் முகப்பின் அருகில் சென்ற அவர் உணவை அங்கு வைத்து விட்டு தனது செல்போனில் புகைப்படம் எடுக்கிறார். அதன் பின்னர் தான் கொண்டு வந்த உணவை தன்னுடனே எடுத்துச் செல்கிறார். இது சம்பந்தமான காட்சிகள் வாடிக்கையாளரின் வீட்டின் முன்பு இருந்த சிசிடிவி கேமாராவில் பதிவாகியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தூர்தஷ் நிறுவனம் “ இது போன்ற பொருத்தமற்ற நடவடிக்கையை, சகிக்க இயலாது. இந்தச் சம்பவத்தின் மூலம், வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் தினமும் உணவு வழங்கும் அனுபவத்தை இழந்திருக்கிறோம். அதற்காக நாங்கள் வருந்துகிறோம்” எனக் கூறியுள்ளது.