விண்மீன் கூட்டத்தின் உருவாக்கம் பற்றிய ரகசியத்தை 50 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் கேலக்ஸியை ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் எடுத்த படத்தின் மூலம் விண்வெளி ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பார்ப்பதற்கு வளையங்களாக காட்சியளிக்கும் பிரகாசமான ஒளிகள் நமது சூரியனைப் போல பல கோடி கோடி விண்மீன்கள் கொண்ட விண்மீன் கூட்டம். 50 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் கார்ட்வீல் உடுதிரளை (Galaxy) ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் அகச்சிவப்பு தொழில்நுட்பத்தின் உதவியுடன் படம் பிடித்துள்ளது.
இதற்கு முன்பு ஹப்பில் டெலஸ்கோப் இந்த கேலக்ஸியை படம் எடுத்ததை விட மிக துல்லியமாகவும் தெளிவாகவாகவும் ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் படம் எடுத்துள்ளது. கார்ட்வீல் கேலக்ஸியின் பிரகாசமாக தெரியும் மையமானது மிகப்பெரிய அளவிலான இளம் நட்சத்திரக் கூட்டங்களின் இல்லமாக உள்ளது.
ஒரு பெரிய சுழல் விண்மீன் கூட்டம் மற்றும் ஒரு சிறிய விண்மீன் கூட்டம் ஆகியவற்றுக்கு இடையேயான மிக பெரிய மோதல் கேலக்ஸியின் வடிவம் மற்றும் கட்டமைப்பைப் பெரிதும் பாதித்தது. கார்ட்வீல் கேலக்ஸி இரண்டு வளையங்களை கொண்டுள்ளது. ஒன்று பிரகாசமான உள் வளையம், மற்றொன்று சுற்றியுள்ள வண்ணமயமான வளையம். இந்த இரண்டு வளையங்களின் ஏற்பட்ட மோதலின் கேலக்ஸியின் மையத்திலிருந்து வெளிப்புறமாக விண்மீன் கூட்டத்தை விரிவடைய வைக்கிறது.
ஒரு குளத்தில் ஒரு கல்லை எறிந்த பிறகு சிற்றலைகள் போல இது காட்சியளிக்கிறது. விண்மீன்கள் மோதலுக்கு முன் பால்வழி அண்டத்தைப் போல சுருள் வடிவத்தில் கார்ட்வீல் கேலக்ஸியும் இருந்திருக்கும் என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரத்தை ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் எடுத்துள்ளது. மேலும் வரும் வாரங்களில் தொடர்ச்சியாக ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் எடுத்த புகைப்படங்களை வெளியிட உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.