கண்ணாமூச்சி காட்டி லெபனானுக்கு தப்பிய கார்லோஸ் கோன்.. யார் இவர்..?

கண்ணாமூச்சி காட்டி லெபனானுக்கு தப்பிய கார்லோஸ் கோன்.. யார் இவர்..?
கண்ணாமூச்சி காட்டி லெபனானுக்கு தப்பிய கார்லோஸ் கோன்.. யார் இவர்..?
Published on

நிதி மோசடி வழக்கில் ஜாமீனில் விடுதலையான நிசான் கார் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கார்லோஸ் கோன் ஜப்பானில் இருந்து லெபனானுக்கு தப்பியோடிவிட்டார்.

கார் தயாரிப்பு நிறுவனமான நிசான் 1990-களில் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித்தவித்தது. அப்படியொரு காலகட்டத்தில் அதன் தலைவராக பொறுப்பேற்றார் கார்லோஸ் கோன். தன் சிறந்த நிர்வாகத்தால் நிசான் நிறுவனத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். பிரேசிலில் பிறந்து லெபனானில் வளர்ந்தவர் கார்லோஸ் கோன். பிரேசில், லெபனான் மற்றும் பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்றவர். ஜப்பானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிசான் நிறுவனத்தின் தலைவராக 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த கார்லோஸ் கோன், ஆயிரம் கோடிக்கும் அதிகமாக நிதி மோசடியில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது.

தமது ஊதியம் உள்ளிட்ட தகவல்களை முழுவதுமாக தெரிவிக்காமல் மறைத்தார் என அவர் மீது ஜப்பான் அரசு வழக்கு தொடர, 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டார் கார்லோஸ் கோன். நூறு நாள்களுக்கும் மேலாக சிறையில் இருந்த அவர், ஜாமீனில் வெளியே வந்தார். வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லக்கூடாது, கணினி மற்றும் தொலைபேசிகளை பயன்படுத்த கட்டுப்பாடு போன்ற நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டது. தீவிர கண்காணிப்புக்கு மத்தியில் டோக்கியோ நகரில் தங்கியிருந்தார் கார்லோஸ் கோன். கிட்டத்தட்ட வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டதைப் போன்ற நிலையில் இருந்த கோன், திடீரனெ தாம் லெபனான் சென்றுவிட்டதாக அறிவித்திருக்கிறார். அநீதியில் இருந்தும் அரசியல் துன்புறுத்தலில் இருந்தும் தப்பிவிட்டதாக கூறியிருக்கிறார் அவர்.

ஜப்பானில் இருந்து எப்படி தப்பினார் கார்லோஸ் கோன்? இதுதான் கடந்த சில நாள்களில் உலக ஊடகங்கள் அதிகம் எழுப்பிய கேள்வி. அதற்கு உறுதியான பதில் கிடைக்காத நிலையில் கார்லோஸ் கோன் தப்பிய விதம் தொடர்பாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. டோக்கியோவில் உள்ள கார்லோஸ் கோனின் வீட்டில் கிரிகோரியன் குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றதாகவும், அதைப் பயன்படுத்தி இசைக் கருவி வைக்கும் பெட்டியில் மறைந்து அவர் தப்பிச் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. தனி விமானம் மூலம் துருக்கி வழியாக லெபனான் தலைநகர் பெய்ரூட்டுக்கு கார்லோஸ் கோன் சென்றதாக சொல்லப்படுகிறது.

3 நாட்டு பாஸ்போர்ட்டுகளை கோன் வைத்துள்ளார். ஆனால் அவை அவரது வழக்கறிஞர் ஹிரோனாகாவிடம் உள்ளன. கார்லோஸ் கோன் தப்பிச் சென்ற தகவலறிந்து வாயடைத்துப் போனதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். கைதிகளை பகிர்ந்து கொள்வது தொடர்பாக ஜப்பான் - லெபனான் இடையே எந்த ஒப்பந்தமும் இல்லை. எனவே கார்லோஸ் கோனை ஜப்பான் அரசு எப்படி கைது செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதுதவிர பிரான்ஸ் நாட்டிலும் கார்லோஸ் கோன் மீது நிதி மோசடி வழக்கு நிலுவையில் இருப்பது தனிக்கதை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com