ஆர்ட்டிக் கடலானது ரஷ்யப்பகுதியில் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே உறைந்த காரணத்தினால் கப்பல்கள் நடுக்கடலில் சிக்கி தவித்துவருகின்றன.
வருடந்தோறும் பனிக்காலங்களில் கடல்நீர் உறைவது வழக்கம். அதற்கு ஏற்றாற்போல் கப்பல்கள் தங்கள் பயணங்களை அமைத்துக்கொள்கின்றன. ஆனால், இந்த ஆண்டு ஆர்ட்டிக் கடலின் ரஷ்யப்பகுதிகளில் பனிப்பொழிவு முன்கூட்டியே தொடங்கிவிட்டதால் கடல்நீரானது கிட்டத்தட்ட 30 செ.மீ ஆழத்திற்கு உறைந்துவிட்டது. இதனால் கிட்டத்தட்ட 18 சரக்குக்கப்பல்கள் மாதக்கணக்கில் நடுக்கடலில் சிக்கித் தவித்துவருகின்றன. மேலும் லாப்டேவ் மற்றும் கிழக்கு சிபேரியன் கடல் பகுதிகளிலும் கடல்நீரானது உறைந்து காணப்படுகிறது.
ரஷ்ய அதிகாரிகள் இதுவரை பனிக்கட்டிகளில் சிக்கித்தவித்த 2 எண்ணெய் சரக்குக் கப்பல்களை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த மாத இறுதிக்குள் மற்ற கப்பல்களும் மீட்கப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.