ட்ரோன் மூலம் விதைப்பந்துகளை தூவும் புதிய முயற்சியை கனடா விஞ்ஞானிகள் கையிலெடுத்துள்ளனர். இந்த முயற்சி மூலம் 2028ம் ஆண்டுக்குள் ஒரு பில்லியன் மரங்களை வளர்க்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
'ஃப்ளாஸ் ஃபாரஸ்ட்ஸ்' (flash forests) என்ற முயற்சியை கனடாவின் விஞ்ஞானிகள் அடங்கிய குழு தொடங்கியுள்ளது. இந்த முயற்சி மூலம் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ட்ரோன்கள் விதைப்பந்துகளை தூவும். கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட சோதனை முயற்சி வெற்றியடைந்ததாகவும், விரைவில் திட்டம் முழு மூச்சுடன் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தெரிவித்த விஞ்ஞானிகள், ஒவ்வொரு வருடமும் 13 மில்லியன் மரங்கள் அழிந்து வரும் நிலையில், 6 மில்லியன் மரங்கள் மட்டுமே புதிதாக வளர்கின்றன. பூமியின் நுரையீரலை மீட்டெடுக்கும் முயற்சியாக இந்த 'ஃப்ளாஸ் ஃபாரஸ்ட்ஸ்' முயற்சி இருக்கும்.
வெறும் விதைகளை மட்டுமே தூவாமல், சத்துகள் நிறைந்த மண்ணுடன் சேர்த்து விதைகள் தூவப்பட உள்ளன. இதன் மூலம் விதைகள் வேகமாக வேர்பிடித்து வளரும்.
சாதாரணமாக ஒரு விதை செடியாக வளரும் காலத்தை விட ட்ரோன்ஸ் மூலம் தூவப்படும் விதைப்பந்துகள் வேகமாக முளைத்து வளரும். இந்த முயற்சி மூலம் 2028ம் ஆண்டுக்குள் ஒரு பில்லியன் மரங்களை வளர்க்க திட்டமிட்டுள்ளோம்.