இந்தியா - கனடா உறவில் விரிசல் பெரிதாகி வரும் நிலையில், கனடாவின் இறையாண்மையை இந்தியா மீறிவிட்டதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டியுள்ளார்.
கனடாவில் வசித்து வந்த காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில், இந்தியாவிற்கு பங்கு இருப்பதாக கனடா பிரதமர் ட்ரூடோ குற்றஞ்சாட்டினார். இந்த விவகாரம் முற்றிய நிலையில், தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்ற இந்தியா, கனடா நாட்டு தூதரக அதிகாரிகள் 6 பேரை வெளியேற்றியது.
இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக, கனடாவின் வெளிநாட்டு தலையீடு தொடர்பான விசாரணை ஆணையத்தில் ட்ரூடோ ஆஜரானார். அப்போது, நிஜ்ஜார் கொலையில் இந்தியாவிற்கு தொடர்புள்ளது என்பதற்கான உளவு தகவலை மட்டுமே, இந்திய அரசுடன் பகிர்ந்துகொண்டதாக தெரிவித்தார். இந்தியாவின் தொடர்புக்கான ஆதாரங்கள் எதையும் பகிர்ந்துகொள்ளவில்லை எனக்கூறினார்.
நிஜ்ஜார் கொலையின் மூலம் இந்தியா, கனடாவின் இறையாண்மையை மீறிவிட்டதாகவும் குற்றஞ்சாட்டினார். மோடி அரசுக்கு எதிரான கனடா நாட்டவர்களின் விவரங்கள் இந்தியாவிற்கு பகிரப்படுவதாவும், பின்னர் அந்த விவரங்கள் லாரான்ஸ் பிஷ்னோய் கும்பல் போன்ற கிரிமினல் கும்பல்களுக்கு செல்வதாகவும் ட்ரூடோ தெரிவித்தார். அது கனடா நாட்டவர்களுக்கு எதிரான வன்முறைக்கு வழிவகுப்பதாகவும் கூறினார்.