ஹாரி மற்றும் மேகன் தம்பதிக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பை திரும்ப பெறுவதாக கனடா அரசு அறிவித்துள்ளது.
பிரிட்டன் அரச குடும்பத்தில் இருந்து வெளியேறுவதாக கடந்த மாதம் அறிவித்த இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் தற்போது கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஹாரி தம்பதிக்கு அளித்து வந்த சிறப்பு பாதுகாப்பை மார்ச் 1 ஆம் தேதியுடன் நிறுத்தவுள்ளதாக கனடா அரசு அறிவித்துள்ளது.
அரச குடும்பத்திலிருந்து வெளியேறிய தம்பதிகளுக்கு கனடா அரசு பணத்திலிருந்து பாதுகாப்பு வழங்க அந்நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உலகிலேயே சக்திவாய்ந்த அரச குடும்பங்களில் ஒன்றான பிரிட்டன் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் பதவியிலிருந்து விலகப் போவதாக இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் கடந்த மாதம் தெரிவித்திருந்தனர்.
பரம்பரை சொத்துகள் தங்களுக்கு வேண்டாம் எனவும் அவர்கள் கூறினர். இவர்களின் இந்த முடிவால் அரச குடும்பம் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும், இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் அரச குடும்பத்தில் இருந்து விலகியதை பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.