மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் நீடித்து வரும் ரோஹிங்ய இஸ்லாமியர்கள் பிரச்னைக்கு தீர்வு காண தாம் தயாராக இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் வசித்து வந்த 6 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்ய இஸ்லாமியர்கள், ராணுவ அடக்குமுறை மற்றும் பாலியல் கொடுமை காரணமாக வங்கதேசத்தில் அடைக்கலம் புகுந்துள்ளனர். அவர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்திக் கொள்ளும்படி ஐ.நா. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடந்த ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ரோஹிங்ய பிரச்னைக்கு தீர்வு காண தான் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் ஆசியான் நாடுகள் எடுக்கும் மனிதநேய அரசியல் முயற்சிகளுக்கு, கனடாவின் முழு ஆதரவு தொடரும் என்று அவர் கூறினார். அத்துடன் புலம்பெயர்ந்த ரோஹிங்ய இன மக்களை மீண்டும் அவர்களது வாழ்விடங்களில் குடி அமர்த்த மியான்மர் மற்றும் வங்கதேச அரசுகளுடன் பணியாற்ற கனடா அரசு தயாராக இருப்பதாகவும் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துக் கொண்டார்.