கனடாவில் சீக்கிய தலைவர்களில் ஒருவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு காரணம் இந்தியா என்று கனடா குற்றம்சாட்டியது. இதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்தது. இந்த விவகாரத்தால் இரு நாடுகளுக்கும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
அதேநேரத்தில், கனடாவின் மக்கள்தொகையில் இந்தியர்களும் அடக்கம். அதிலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் சீக்கியர்கள் இருக்கின்றனர். இவர்களில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளும் அடங்குவர். இவர்கள், ’காலிஸ்தான்’ என்ற தனி நாடு கேட்டுப் போராடி வருகின்றனர். இதை இந்தியா கடுமையாக எதிர்த்து வருகிறது. மேலும், இவர்கள் பிரிவினைவாதிகள் அடையாளப்படுத்தப்பட்டு உள்ளனர். ஆனால் கனடாவில் இவர்களுக்கு குடியுரிமையும், சலுகைகளும் வழங்கப்படுவதால் பலரும் அங்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்த நிலையில், நிஜ்ஜார் படுகொலை சம்பவத்தின் எதிரொலியாக கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள், தொடர்ந்து இந்தியர்களின் மேல் ஆங்காங்கே தாக்குதலை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, கடந்த நவம்பர் 3ஆம் தேதி பிராம்ப்டனில் உள்ள கோயிலுக்குச் சென்ற இந்து பக்தர்கள் மீது, காலிஸ்தான் ஆதரவாளர்கள் கடுமையான தாக்குதலை நடத்தினர். இந்த வீடியோ இணையத்திலும் வைரலாகியது. இதற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ”கனடாவில் இந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்த காலிஸ்தானிகள் முயற்சிக்கலாம்” என லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கனடாவின் முன்னாள் அமைச்சருமான உஜ்ஜல் தேவ் தோசன்ஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “இந்தியாவில் அமைதியாய் வாழ்ந்த சீக்கியர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிப்பது காலிஸ்தானிகளின் திட்டமாக இருக்கலாம்.
சில பிரிவினைகளை விதைத்து அந்தப் பிரிவினையை இந்தியாவிற்குள் கொண்டு செல்வதுதான் அவர்களின் முயற்சி. அதுவே அவர்களின் நம்பிக்கையாக உள்ளது. காலிஸ்தானி வன்முறையைப் பொருத்தவரை கனடாவில் அரசியல் வர்க்கம் தூக்கத்தில் இருக்கிறது. சட்ட அமலாக்க அதிகாரிகள் விரும்புவதற்கு நிறைய விட்டுவிடுகிறார்கள். கனடாவில் என்ன நடக்கிறது என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு நன்றாகவே தெரியும்” எனத் தெரிவித்துள்ளார்.