இறந்து போன மகனை அடக்கம் செய்துவிட்டு வந்த பின், மகன் உயிரோடு வந்து பேசினால் எப்படியிருக்கும்? இப்படியொரு சம்பவம் அமெரிக்காவில் நடந்திருக்கிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர் பிராங் கெர்ரிங்கன். வயது 82. இவரது மகன் பெயரும் பிராங்தான். 57 வயதான இவர் கொஞ்சம் மனநிலை சரியில்லாதவர் என்று கூறப்படுகிறது. அதனால் அலைந்துகொண்டே இருப்பாராம். இவர் இறந்துவிட்டதாக, தகவல் வந்ததை அடுத்து உடலைப் பார்த்தார் கெர்ரிங்கன். மகனின் சாயல் இல்லையென்றாலும் பார்த்து ரொம்ப நாளாகிவிட்டதால் அவனாகத்தான் இருப்பான் என்று நினைத்து உடலை வாங்கி, 20 ஆயிரம் டாலர் செலவழித்து அடக்கம் செய்தார்.
பின்னர் வீட்டுக்கு வந்துவிட்டார். அதற்கு பிறகு அவருக்கு ஒரு ஃபோன் வந்தது. அதில் பேசிய கெர்ரிங்கனின் நண்பர், ‘உன் மகன் உயிரோடுதான் இருக்கிறார்’ என்றதும் அவருக்கு அதிர்ச்சி. மகனிடம் போனில் பேசி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அப்படியென்றால் யாரை அடக்கம் செய்தோம் என்ற கேள்வி அவருக்கு எழ, மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரித்திருக்கிறார். அவர்கள் செய்த தவறால் இந்தக் குழப்பம் நடந்திருப்பது தெரிய வந்திருக்கிறது.
இந்த சம்பவம் கலிபோர்னியா பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.