அமெரிக்காவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் போது, தொலைக்காட்சி நேரலையில் செய்திகளை வழங்கிக்கொண்டிருந்த செய்தி வாசிப்பாளர் செய்த செயல் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நேற்றும் அதற்கு முன் தினமும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து சான் டியாகோ வரை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் பல கட்டடங்கள் மற்றும் சாலைகள் சேதமடைந்தன. வீடுகளுக்கு நிலத்துக்கு அடியில் கொண்டு செல்லப்படும் சமையல் எரிவாயு குழாய் உடைந்ததால், 2 வீடுகளில் எரிவாயு கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது.
இந்நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நிலநடுக்கத்தின் போது நேரலையில் செய்திகளை வழங்கிக்கொண்டிருந்த சிபிஎஸ் என்ற தொலைக்காட்சியின் செய்தி தொகுப்பாளர் சாரா டான்சே, நாங்கள் மிகவும் வலுவான நடுக்கத்தை உணருகிறோம் என்று கூறினார். நாங்கள் மேசைக்கு அடியில் செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன் எனக்கூறி கொண்டே, சக தொகுப்பாளரின் கையை பிடித்துக்கொண்டு மேசைக்கு அடியில் சென்று மறைந்து கொண்டது இணையத்தில் வைரலாகி வருகிறது.