தேனிலவு சென்ற இடத்தில் டூரிஸ்ட் நிறுவனத்தால் ஆழ்கடலில் தவிக்கவிடப்பட்ட புதுமண தம்பதி குறிப்பிட்ட நிறுவனம் மீது 5 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடுத்துள்ள சம்பவம் அமெரிக்காவில் நடந்திருக்கிறது.
கலிஃபோர்னியாவைச் சேர்ந்த அலெக்சாண்டர் பர்க்கிள், எலிசபெத் வெப்ஸ்டர் என்ற தம்பதி லஹானியாவைச் சேர்ந்த ஸ்நோர்கெல்லிங் நிறுவனத்தின் மூலம் ஹவாய் தீவுக்கு தேனிலவு சென்றிருக்கிறார்கள். அங்கு அந்த தீவின் ஆழ்கடலில் ஸ்கூபா டைவிங் செய்வதற்காக பர்க்கிளும், வெப்ஸ்டரும் மற்ற சில குழுக்களோடு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.
ஒரு இடத்தில் ஸ்கூபா டைவிங் செய்ய உரிய பாதுகாப்பு அம்சங்களோடு சுற்றுலா பயணிகள் படகிலிருந்து கடலுக்குள் இறக்கி விடப்பட்டிருக்கிறார்கள். அப்போது பர்க்கிள் தம்பதி தொடக்கத்தில் ஆழ்கடலில் நீந்திக் கொண்டிருந்திருக்கிறார்கள். நீந்திச் செல்ல செல்ல அபாயகரமான பகுதியை இருவரும் அடைந்திருக்கிறார்கள்.
இதனால் வழிகாட்டியை அழைக்க முற்பட்டிருக்கிறார்கள். ஆனால் அந்த தம்பதி இருப்பதையே மறந்துவிட்டு அந்த குழுவினர் படகு இறக்கிவிடப்பட்ட இடத்திலிருந்து திரும்பிச் சென்றிருக்கிறது. இதனால் செய்வதறியாது பரிதவித்துப் போன தம்பதி இருவரும், வேறு வழியில்லாமல் நீந்தியே கரைக்குச் செல்ல முற்பட்டிருக்கிறார்கள்.
ஆனால், ஒரு கட்டத்தில் இருவரும் சோர்ந்து போனதால் இறந்தே விடுவோம் என்று அச்சமடைந்திருக்கிறார்கள். இருப்பினும் இளைமையாகவும், ஆரோக்கியமாகவும் இருந்ததால் எப்படியோ நீந்தி வேறொரு கரைக்குச் சென்றவர்கள் அங்கிருந்தவர்களின் ஃபோன் மூலம் டூரிஸ்ட் நிறுவனத்தை தொடர்புகொண்டு தங்களை தொலைத்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார்கள்.
அதன் பிறகு மீட்கப்பட்ட அலெக்சாண்டர் பர்க்கிள் மற்றும் எலிசபெத் வெப்ஸ்டர் தம்பதி, ஆழ்கடலில் தவிக்க விட்டுச்சென்ற நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்ந்து 5 மில்லியன் அமெரிக்க டாலரை இழப்பீடாக கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்கள்.
இது குறித்து தம்பதியின் வழக்கறிஞர் ஹவாய் நியூஸ் நவ் செய்தித்தளத்திடம் பேசியபோது, “இந்த சம்பவம் ஒரு அதிர்ச்சிகரமான, அபாயகரமான சூழலை என் கட்சிக்காரர்களுக்கு ஏற்படுத்தியிருந்தது. தேனிலவுக்காக வந்தவர்கள் டூரிஸ்ட் நிறுவனத்தின் அலட்சியத்தால் உயிரையே விடும் அளவுக்குச் சென்றிருக்கிறார்கள். இது மிகவும் கோரமான நிகழ்வு.” என சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளுக்கும், வழக்குக்கும் எந்த பதிலும் கூறாதிருக்கும் குறிப்பிட்ட அந்த ட்ராவல் ஏஜென்சி, பயணிகளை அழைத்துச் செல்லும் போது மேற்கொள்ளும் நெறிமுறைகளை மட்டும் மாற்றியமைத்திருக்கிறது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.