போட்டியின் போது மைதானத்தை தாண்டி மக்கள் கூட்டத்திற்குள் காளை புகுந்து முட்டியதில் 18 பேர் காயமடைந்தனர்.
ஸ்பெயினில் காளைபிடி திருவிழா நடந்துள்ளது. இந்தப் போட்டியின்போது மைதானத்திற்குள் விடப்படும் காளை , அங்கு நிற்கும் வீரர்களை முட்ட முயற்சிக்கும். அதனிடம் இருந்து லாவகமாக வீரர்கள் தப்பித்து ஓடுவர். இந்த விளையாட்டை மைதானத்தை சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள பார்வையாளர்கள் அரங்கில் அமர்ந்து மக்கள் பலரும் கண்டுகளிப்பர்.
இந்நிலையில் மைதானத்திற்குள் இருந்து தாவிக்குதித்து பார்வையாளர்கள் அரங்குக்குள் நுழைந்த காளை ஒன்று அங்கிருந்தவர்களை முட்டித்தாக்கியது. இதில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 18 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கூட்டத்திற்குள் காளை புகுந்து முட்டித்தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில், மைதானத்திற்குள் ஆக்ரோஷமாக முட்ட முயற்சிக்கும் காளை, பாதுகாப்பு வேலியை தாண்டிக்குதித்து கூட்டத்துக்குள் நுழைகிறது. இதனை சற்றும் எதிர்பாராத மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடிக்கின்றனர். பாதுகாவலர்கள் சிலர் மாட்டைக்கட்டுப்படுத்த முயற்சிக்கின்றனர். ஆனால் காளை அங்குமிங்கும் ஓடி மக்களை முட்டித்தாக்குகிறது. இறுதியாக காவலர்களால் காளை சுட்டுக்கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காளை சுட்டுக்கொல்லப்பட்டதற்கு விலங்கு ஆர்வலர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். போட்டி நிர்வாகத்தின் பாதுகாப்பு குறைபாட்டிற்கு காளையை பலி வாங்கிவிட்டதாக கருத்து தெரிவித்துள்ளனர்.