‘உழைப்பு ஓய்வறியாது’ என சொல்வதுண்டு. அதற்கு உதாரணமாக வாழ்ந்து அசத்தியுள்ளார் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 90 வயது மெக்கானிக் ஒருவர். அந்த நாட்டின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள குளோசெஸ்டர் நகரை சேர்ந்தவர் பிரையன் வெப். சுமார் 75 ஆண்டு காலம் தொடர்ச்சியாக ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.
கார் உற்பத்தி நிறுவனமான Vauxhall நிறுவனத்தில் அவர் பணியாற்றியுள்ளார். 1946, ஜனவரி வாக்கில் வேலை ஏதும் கிடைக்குமா? என கேட்டு அந்நிறுவனத்தை அவர் நாடியுள்ளார். முதலில் தொழில் பழகுநராக தனது பணியை அந்நிறுவனத்தில் அவர் துவக்கியுள்ளார். படிப்படியாக பல்வேறு பதவிகளை அதே நிறுவனத்தின் அவர் வகித்துள்ளார். கடந்த 34 ஆண்டுகளாக வாரண்டி அட்மினிஸ்ட்ரேட்டராக அவர் பணியாற்றி உள்ளார். பணி ஓய்வுக்கான வயது எட்டியதும் ‘இன்னும் இரண்டு ஆண்டுகள் வேலை செய்கிறேன்’ என சொல்லி 25 ஆண்டுகளை அவர் கடத்தியுள்ளார்.
“உழைப்பு என்னை இளமையுடன் வைத்துக் கொள்வதாக நான் உணர்ந்தேன். அதனால் தான் அதற்கு நான் ஓய்வு கொடுக்க விரும்பவில்லை. ஆரம்பத்தில் இந்த தொழில் கொஞ்சம் கடினமாக இருந்தது. பழக பழக எளிதாகி விட்டது. கார்கள் மாறின, காலம் மாறின. இருந்தும் நான் எனது பணியை தொடர்ந்தேன். இப்போது அதற்கு ஓய்வு கொடுத்துள்ளேன்” என பிரையன் வெப் தெரிவித்துள்ளார்.
அவரை சக ஊழியர்கள் ரொம்பவே மிஸ் செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
‘நான் வேலையை மிஸ் செய்தாலும் எதிர்வரும் நாட்களில் ஒரு கப் தேநீரும், மதிய நேரத்தில் ஒரு குட்டி தூக்கத்தையும் எதிர்நோக்கி உள்ளேன்’ என பிரையன் தெரிவித்துள்ளார்.
அவருக்கு நினைவு பரிசாக ஸ்பேனர் ஒன்று பரிசளிக்கப்பட்டுள்ளது. அதோடு ‘வாழ்நாள் ஊழியர் விருது’ என அவர் பெயர் பொறித்த உலோக பட்டயம் ஒன்றும் கொடுத்துள்ளது அவர் பணியாற்றிய நிறுவனம்.
தகவல் உறுதுணை : பிபிசி