இந்தோனேஷியாவில் விசா அதிகாரியை கன்னத்தில் அறைந்த லண்டன் பெண்ணிற்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தச் சம்பவம் நடைபெற்றது. லண்டனைச் சேர்ந்த அந்தப் பெண் அவுஜ்-இ-தகத்தஸ், இந்தோனேஷியாவின் பாலி நகரில் இருந்து விமானம் மூலம் லண்டனம் செல்ல திட்டமிட்டுள்ளார். ஆனால், விசா காலாவதியானது தொடர்பாக அவரிடம், விமான நிலையத்தில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசா காலகெடு முடிந்தும் அதிக நாட்கள் தங்கியதற்காக அவர் 4 ஆயிரம் டாலர் அபராதமாக செலுத்த வேண்டியிருந்ததாக கூறி, இந்த விசாரணை நடத்தப்பட்டது. இதனால், அந்தப் பெண்மணி விமானத்தை தவரவிட நேர்ந்ததாக தெரிகிறது.
இதனையடுத்து, தன்னை விசாரித்த விசா அதிகாரியிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் கோபம் அதிகமாகி விசா அதிகாரியை பளார் என்று கன்னத்தில் அறைந்துள்ளார். இது அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியது. விசாரணை அதிகாரியை அவர் அறைந்த வீடியோ காட்சிகள் அப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வந்தது.
பின்னர், இந்த விவகாரம் தொடர்பாக இந்தோனேஷியா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. 7 மாதங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. லண்டன் பெண்மணிக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து இந்தோனேஷியா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.