ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் மீது, பிரிட்டீஷ் நடிகை லைசைட் அந்தோணி பாலியல் புகாரை இன்று கூறியுள்ளார்.
பிரபல ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன். ஆஸ்கர் விருது பெற்ற இவர், கடந்த 30 வருடங்களாக 15-ம் மேற்பட்ட நடிகைகளை பாலியல் வன்முறை செய்ததாக செய்திகள் வெளியானது. இவரது திரைமறைவு வாழ்க்கையை, நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டதை அடுத்து பல ஹாலிவுட் நடிகைகள், வெய்ன்ஸ்டீனின் பாலியல் லீலைகளை தைரியமாக வெளியே கூறினர். அதில் முக்கியமானவர் பிரபல நடிகையான ஏஞ்சலினா ஜோலி.
அவரும் நடிகை க்வெயினத் பால்ட்ரோவும் அளித்துள்ள பேட்டியில், தாங்கள் பாலியல் தொல்லைக்கு ஆளானதாகவும் ஆனால் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தனர். இதே போல இத்தாலிய நடிகை ஏசியா அர்ஜெண்டா, நடிகைகள் காரா டெலவிங், ரோஸ் மேக்கோவன் ஆகியோரும் அவர் மீது பாலியல் புகார் கூறியிருந்தனர்.
இந்நிலையில் லைசைட் அந்தோணி என்ற பிரட்டீஷ் நடிகையும் வெய்ன்ஸ்டீன் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். 55 வயதான இந்த நடிகை, தனது இளம் வயதில் பட வாய்ப்புக்காக லண்டனில் அவரைச் சந்தித்ததாகவும் பாதி ஆடையை மட்டுமே அணிந்திருந்த அவர், கட்டிப்பிடிக்க முயன்றதாகவும் இதை எதிர்பார்த்திருந்ததால் அவரிடம் இருந்து தப்பி வந்ததாகவும் கூறியுள்ளார். பின்னர் நடிகையை பின் தொடர்ந்த வெய்ன்ஸ்டீன், அவர் வீட்டுக்கே வந்துவிட்டதாகவும் அங்கு கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்றதாகவும் கடைசியில் போராட முடியாமல் விட்டுக் கொடுத்துவிட்டதாகவும் நடிகை தெரிவித்துள்ளார். வெய்ன்ஸ்டீன் மீது 5 வது நடிகை கொடுத்த புகார் இது. மேலும் பல நடிகைகள் புகார் கொடுப்பார்கள் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆஸ்கர் அமைப்பு, வெய்ன்ஸ்டீனை அந்த அமைப்பில் இருந்து நீக்கியுள்ளது. வெய்ன்ஸ்டீனின் மனைவி அவரை விட்டு பிரியப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.