மியான்மரில் வலுக்கும் மக்கள் போராட்டம்; ராணுவத்துக்கு எதிராக இங்கிலாந்து தீவிரம்!

மியான்மரில் வலுக்கும் மக்கள் போராட்டம்; ராணுவத்துக்கு எதிராக இங்கிலாந்து தீவிரம்!
மியான்மரில் வலுக்கும் மக்கள் போராட்டம்; ராணுவத்துக்கு எதிராக இங்கிலாந்து தீவிரம்!
Published on

ராணுவ ஆட்சி நடந்து வரும் மியான்மரில் எங்கும் திரும்பினாலும் போராட்டம், உலக நாடுகள் கண்டனம் என நிலைமை படுமோசமாகி இருக்கிறது. அதுகுறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.

மியான்மரில் ஆங் சாங் சூச்சியின் தேசிய ஜனநாயக லீக் கட்சியினர் ஆட்சியில் இருந்த நிலையில், ராணுவத்தால் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டது. மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் 83 சதவீத வாக்குகளை பெற்று மீண்டுமொரு மிகப்பெரிய வெற்றியை ஆளும் தேசிய ஜனநாயக லீக் பதிவு செய்திருந்தது. இந்தத் தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளது என்று கூறி, ஆட்சி கவிழ்ப்பை நியாயப்படுத்தியுள்ளது மியான்மர் ராணுவம். ஆனால், அதற்கான ஆதாரங்கள் எதையும் ராணுவம் வெளியிடவில்லை.

இந்நிலையில், மியான்மரின் ராணுவ ஆட்சி மாற்றத்தின் தலைவர்கள், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூச்சியை விடுவிக்க வேண்டும் என்று இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார். மியான்மரின் ஜனநாயக மாண்பிற்கு மதிப்பளித்து ராணுவத்தினர் ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராகப் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ராணுவம் விதித்துள்ள தடையை மீறி இந்தப் போராட்டங்கள் நடைபெற்று வருவதால் போராட்டத்தை ஒடுக்க, அடக்குமுறையை ராணுவம் கையாண்டு வருகிறது.

கடந்த 20 நாள்களாக மியான்மரில் ஜனநாயக ஆதரவாளர்கள் யாங்கோன் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போராட்டப் பேரணிகளை நடத்தி வருகின்றனர். போராட்டத்தின் உச்சகட்டமாக கலவரத்தில் ஈடுபட்ட இரண்டு போராட்டக்காரர்கள், ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அமைதியான போராட்டத்தில் 2 பேர் உயிரிழந்ததற்கு இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, ``ஜனநாயகம் நசுக்கப்படுவதற்கு, கருத்து சுதந்திரம் முடக்கப்படுவதற்கும் எதிராக எங்கள் சர்வதேச கூட்டமைப்பினருடன் இணைந்து அடுத்த நடவடிக்கை எடுப்போம்" என்று தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில், மியான்மரில் நிலைமை மோசமடைந்து வருவதாகவும், மனித உரிமை மீறல்கள் மற்றும் முறைகேடுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த நெருக்கடி ரோஹிங்கியாக்கள் மற்றும் பிற இன சிறுபான்மையினருக்கு அதிக ஆபத்தை அளிக்கும் எனவும் ராப் தனது கருத்தை தெரிவிக்க இருக்கிறார்.

மியான்மரில் நிலை மோசமடைந்து வருவதையடுத்து, அங்கு தற்காலிகமாக இணைய சேவை முடக்கப்பட்டது. காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ராணுவத்தினரின் அடக்குமுறைக்கு எதிராக உலகம் முழுக்க இணையத்தில் கடும் கண்டனங்கள் எழுந்தன. மியான்மர் ராணுவத்தின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கமான டாட்மேடவ், ஃபேஸ்புக் வரம்புகளை மீறியதற்காக முடக்கப்பட்டுள்ளது. பலமுறை ஃபேஸ்புக்கின் வரம்புகளை இந்த ராணுவப் பக்கம் மீறிவந்ததால் தற்போது முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com