பிரிட்டனில் அடுத்த ஆறு மாதங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளில் பிரிட்டனும் முக்கிய இடத்திலுள்ளது. அந்நாட்டு பிரதமர், சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்ட 14 ஆயிரத்து 543 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் 750க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
எனவே பிரிட்டனில் ஆறு மாதங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் மட்டுமே கொரோனா வைரஸை கட்டுப்படுத்தமுடியும் என அந்நாட்டு துணை தலைமை மருத்துவ அதிகாரி எச்சரித்துள்ளார். இதன் மூலம் அங்கு கொரோனா தாக்கத்தை விரைவில் கட்டுப்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சுமார் 15 லட்சம் மக்களை 3 மாதங்களுக்கு வீட்டிலேயே இருக்குமாறு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியிருந்தது. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கைகுலுக்குவதில் தவறில்லை என்று அண்மையில் அவர் பேசிய வீடியோ வேகமாகப் பரவி வருகிறது.
கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் வீட்டிலிருந்தே பணியாற்றுவதாக ஜான்சன் வீடியோ வெளியிட்டவுடன், சமூக வலைத்தளங்களில் அவரது முந்தைய வீடியோ ஆக்கிரமித்து வருகிறது. தனது டவுனிங் ஸ்டீட் மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய போரிஸ் ஜான்சன், நான் அனைவருடனும் கைகுலுக்குகிறேன், மருத்துவமனையில் ஆய்வு செய்தபோது அங்கு கொரோனா நோயாளிகளும் இருந்திருக்கக் கூடும், அவர்களுடன் கைகுலுக்கி இருக்கலாம். கைகுலுக்குவதை தொடரத்தான் போகிறேன் என்று அப்போது ஜான்சன் பேசியுள்ளார். இந்நிலையில், இப்போது போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியிருக்கிறது.