"கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணத்தை கூட மீட்டுக் கொடுக்க வேண்டாம்; எங்கள் குழந்தையின் அஸ்தியை மட்டுமாவது மீட்டுக் கொடுத்து விடுங்கள்" என்று போலீஸாருக்கு பிரிட்டனை சேர்ந்த தம்பதியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பிரிட்டனில் உள்ள பிர்மிங்காம் நகரில் உள்ள ஒரு வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொள்ளையர்கள் புகுந்து அங்கிருந்த ஆயிரக்கணக்கான மதிப்பிலான நகை, பணத்தை கொள்ளையடித்து தப்பிவிட்டனர். வெளியூருக்கு சென்றிருந்த வீட்டின் உரிமையாளர்கள், திரும்பி வந்து பார்த்த போது தங்கள் வீடு கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
என்னென்ன பொருட்கள் திருடு போயிருக்கின்றன என அவர்கள் பார்த்தபோது, 10 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்ததும் உயிரிழந்த தங்கள் மூத்த குழந்தையின் சாம்பல் கலசமும் கொள்ளைப் போனது தெரியவந்தது. இதனால் மிகுந்த சோகத்துக்கு உள்ளான அந்த தம்பதியர், போலீஸாரிடம் அளித்த புகாரில், "எங்கள் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணத்தை கூட மீட்டுக் கொடுக்க வேண்டாம். ஆனால், தயவு செய்து எங்கள் குழந்தையின் அஸ்தியை மட்டும் மீட்டுக் கொடுங்கள்" எனக் கூறியுள்ளனர்.
பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்த அந்த தம்பதியருக்கு முதலில் பிறந்த குழந்தை உடல்நிலை சரியில்லாமல் சில மணிநேரங்களிலேயே இறந்துவிட்டது. இந்த துக்கத்தை தாங்கிக் கொள்ள முடியாத அந்த தம்பதியர், அந்தக் குழந்தையின் சாம்பலை 10 ஆண்டுகளாக பாதுகாத்து வந்திருக்கிறார்கள். தற்போது அது கொள்ளை போயிருப்பது அவர்களை விரக்தியடைய செய்துள்ளது.
இதுகுறித்து தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள போலீஸார், "கொள்ளையர்கள் கட்டாயம் இந்த அஸ்திக் கலசத்தை எங்கேனும் வீசி எறிந்திருப்பார்கள். யாரேனும் அந்தக் கலசத்தை கண்டால் அதனை அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படையுங்கள்" என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.