பிரிட்டனில் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யக்கூடிய வகையில், மருத்துவ வசதிகளை விரிவுப்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
சீனாவில் உருவான கொரோனா வைரஸின் தாக்கம் 180க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் தனது கோர முகத்தைக் காட்டி வருகிறது. இத்தாலியில் மட்டும் சுமார் 14 ஆயிரம் பேரை கொரோனா பலி கொண்டுள்ளது. அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
ஸ்பெயினில் 10 ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ள நிலையில், ஒரு லட்சத்து 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கும் வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. மிகவும் மோசமான அளவில் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்கி விட்டது. அங்கு கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பிரான்ஸில் உயிரிழப்புகள் சுமார் 5 ஆயிரத்து 300ஐத் தாண்டிவிட்டது. ஈரானில் 3 ஆயிரத்து 100 பேரும், பிரிட்டனில் சுமார் 3 ஆயிரம் பேரும் வைரசால் உயிரிழந்துள்ளனர். பெல்ஜியம், நெதர்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துவிட்டனர். உயிரிழப்புகள் ஒருபுறம் அதிகரித்த வண்ணமே உள்ள நிலையில், உலகளவில் இதுவரை 2 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
உலக நாடுகளை கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் அனைத்து நாடுகளும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் பிரிட்டனில் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யக்கூடிய வகையில், மருத்துவ வசதிகளை விரிவுப்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைப் பணிகளில் பிரிட்டன் மந்தமாக இருக்கிறது என விமர்சனம் எழுந்த நிலையில், அந்நாட்டு அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. கொரோனாவை உறுதி செய்ய ஜெர்மனியில் வாரத்திற்கு 5 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் நிலையில், பிரிட்டனில் நாள் ஒன்றுக்கு தற்போது 13 ஆயிரம் பேருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யும் வசதி உள்ளது.
இம்மாத இறுதிக்குள் தினமும் ஒரு லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளும் வசதியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் மேட் ஹேன்காக் தெரிவித்துள்ளார்.