கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வரும் நோயாளிகளுக்கு மன ஆறுதல் தர அன்பின் கரங்கள் என்ற வித்தியாசமான நடைமுறை பிரேசில் நாட்டில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அது என்ன? இப்போது பார்க்கலாம்
கொரோனா என்ற கொடூர அரக்கனுடன் மனித குலம் ஓராண்டுக்கு மேலாக நடத்தி வரும் போரில் நெகிழவும் உருகவும் வைக்கும் ஏராளமான நிகழ்வுகள் நடந்துள்ளன. அதில் ஒன்று பிரேசில் நாட்டில் தற்போது நடந்துகொண்டுள்ளது. கொரோனா தொற்றுடன் அவசர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடி வரும் நபர்கள் அவரவர் மனைவி, தந்தை, தாய், மகன், மகள் என நெருங்கி உறவுகள் அருகில் இருக்க விரும்புகின்றனர். ஆனால் உயிர் பயத்துடன் சின்னஞ்சிறிய அறையில் தனிமையில் இருக்கும் நோயாளிகளுக்கு இந்த வாய்ப்பு கிடைப்பதே இல்லை.
இதற்கு தீர்வு காண பிரேசில் நாட்டின் சா கார்லோஸ் என்ற சிறிய ஊரில் உள்ள இரு செவிலிகள் ரப்பர் கையுறையில் மிதமானவெப்பம் உள்ள தண்ணீரை நிரப்பி அதை நோயாளிகளுடன் கையுடன் கோர்க்குமாறு செய்கின்றனர். இதனால் தங்களுக்கு நெருங்கியவர்களுடன் கைகோர்த்திருப்பதை போன்ற உணர்வு நோயாளிகளுக்கு கிடைக்கிறது. இதனால் நோயாளிகளுக்கு மன ரீதியான ஆறுதல் கிடைப்பதுடன் மருத்துவ ரீதியாகவும் வேறு சில பலன்கள் கிடைப்பதாக அந்த செவிலிகள் கூறுகின்றனர். அன்பின் கரங்கள் என அழைக்கப்படும் இந்த வினோத யுக்தி பலன் தருவதை கண்டு பிரேசிலில் மற்ற மருத்துவமனைகளும் இதே பாணி சிகிச்சையை கையாள தொடங்கியுள்ளன.