பாகிஸ்தான் நாட்டில் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர் முகம்மத் இக்ரம், வயது 32. அவருக்கு கைகள் இல்லை. ஆனால் கழுத்தைத் நெகிழ்த்தி, தன் தாவாயால் பந்தைத் தாக்கி மூலைக்கு அனுப்பி ஸ்னூக்கரில் சாதிக்கிறார் இக்ரம். கைகள் இல்லாத அவரது அசத்தலான ஆட்டம் அனைவரையும் அதிரவைக்கிறது.
சாமுன்ட்ரி என்ற கிராமத்தில் பிறந்த இக்ரம், எட்டு ஆண்டுகள் தாவாயால் ஸ்னூக்கர் பந்துகளில் பயிற்சி செய்து கற்றிருக்கிறார். இன்று அநாயசமாக விளையாடி வருகிறார். "நான் மிகச்சிறந்த ஸ்னூக்கர் வீரர்களைச் சந்தித்திருக்கிறேன். நான் ஒரு ரியல் ஜீனியஸ் என்று பாராட்டியுள்ளனர். என்னால் பாகிஸ்தானுக்கு மிகச்சிறந்த புகழ் கிடைக்கும்" என்கிறார் இக்ரம்.
ஏழைக்குடும்பத்தில் ஒன்பது குழந்தைகளில் ஒருவராக பிறந்த இக்ரம் படிக்காத, புறக்கணிக்கப்பட்ட சிறுவனாக இருந்தார். அவருக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஸ்னூக்கர் விளையாட்டைப் பார்த்துவந்திருக்கிறார். ஆனால் ஒருநாள் ஸ்னூக்கர் விளையாடுவோம் என்று அவர் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை.
ஆனால், ஸ்னூக்கர் விளையாடும் ஆர்வம் எப்படி ஏற்பட்டது என்று இக்ரமுக்குத் தெரியவில்லை. யாருக்கும் தெரியாமல் ரகசியமாக பயிற்சி பெற்றுவந்திருக்கிறார். மற்றவர்கள் விளையாடுவதை ஆர்வத்துடன் பார்த்துவந்த இக்ரம், தானும் அப்படி ஆடவேண்டும் என தனது தாயிடம் கேட்டிருக்கிறார்.
பின்னர், அவர் தன் தாவாயால் பந்தை நகர்த்தி விளையாடியிருக்கிறார். இக்ரமின் ஆர்வத்தை அறிந்த பலரும் அவரை அங்கீகரித்துள்ளனர். ஏதாவது உணவகங்களுக்குச் சென்றால், இலவசமாக உணவளிக்கிறார்கள். சிலர் அவருக்கு உணவூட்டும் உதவியையும் செய்துள்ளனர்.
"எனக்குக் கடவுள் கைகளைக் கொடுக்கவில்லை. ஆனால் மனவுறுதியைக் கொடுத்திருக்கிறார். என் இலட்சியத்தை அடைய அந்த மனவுறுதியைப் பயன்படுத்துகிறேன். எனவே ஒருவரும் நம்பிக்கையை இழக்கத் தேவையில்லை" என்று கூறும் இக்ரம், ஒரு சர்வதேச போட்டியில் பங்கேற்கவேண்டும் என்ற பெருங்கனவை வைத்திருக்கிறார்.