எல்லை பிரச்னை தொடர்பாக இந்தியா-சீனா இடையே பதற்றம் நிலவிவரும் நிலையில் சீன பாதுகாப்பு ஆலோசகர் யாங் ஜீச்சியை, இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்துப் பேசினார்.
சிக்கிம் மாநில எல்லையில் உள்ள தோக்லாம் பகுதி தொடர்பாக இருநாடுகள் இடையே ஏற்பட்டுள்ள பிரச்னை தொடர்பாக சீன பாதுகாப்பு ஆலோசகருடன் அஜித் தோவல் ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இதுதொடர்பாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்தித்து பேசவும் அவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்கும் மாநாடு சீனாவில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பெய்ஜிங் சென்றுள்ள அஜித் தோவல், சீன பாதுகாப்பு ஆலோசகருடன் தனியாகச் சந்தித்துப் பேசினார். இந்தியா, சீனா மற்றும் பூடான் ஆகிய நாடுகளின் எல்லைப்பகுதியில் அமைந்திருக்கும் தோக்லாம் பீடபூமி தங்களுக்கே சொந்தம் என்று சீனா திடீரென உரிமை கோருகிறது. இதைத்தொடர்ந்து தோக்லாம் பீடபூமியை ஒட்டிய பகுதிகளில் இந்தியா மற்றும் சீனா ஆகிய இருநாடுகளுமே படைகளை அதிக அளவில் குவித்து வருவதால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.