பொலிவியா முன்னாள் அதிபருக்கு தஞ்சமளிக்க முன்வந்த மெக்சிகோ
பொலிவியாவின் முன்னாள் அதிபர் இவோ மொரெல்ஸ்க்கு மெக்சிகோ தஞ்சம் அளிக்க முன்வந்துள்ளது.
பொலிவியாவில் கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ந்து அதிபராக பதவி வகித்து வந்தவர் இவோ மொரெல்ஸ். இவர் நாட்டின் வறுமை ஒழிப்பு, பொருளாதார மேம்பாடு போன்றவற்றில் முக்கிய பங்காற்றியுள்ளார். கடந்த மாதம் 20 ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் 4 ஆவது முறையாக மொரெல்ஸ் போட்டியிட்டார். மொரெல்ஸ்க்கும் முன்னாள் அதிபரும் புரட்சிகர இடது முன்னணி தலைவருமான கார்லஸ் மெசாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
தேர்தலில் மொரெல்ஸ் 4 ஆயிரத்து 707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் தேர்தல் முடிவுகளை நிராகரித்த எதிர்க்கட்சிகள், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றஞ்சாட்டின. இதையடுத்து இவோ மொரெல்ஸ் பதவி விலகக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களின் தொடர் போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவரவும், அமைதி திரும்பவும் இவோ மொரெல்ஸ் பதவி விலகினார். போராட்டத்துக்கு வெற்றி கிடைத்ததால் தலைநகர் லா பாஸ் உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூடி ஆடிப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். புதிய தேர்தல் நடைபெறும் வரை தற்காலிக அதிபராக செனட் அவையின் துணைத்தலைவர் செயல்பட உள்ளார். தேர்தலில் முறைகேடு செய்ததகாக அந்நாட்டு காவல்துறையினர் மொரெல்ஸை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மொரெல்ஸ், பொலிவிய தலைநகர் லா பாஸ் நகரிலுள்ள மெக்சிகோ நாட்டு தூதரகத்தில் தஞ்சமடைய அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. உள்நாட்டு அரசியலில் தலையிடவில்லை என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசியல் ரீதியாக தஞ்சம் அளிப்பது தங்கள் நாட்டின் வழக்கம் என்றும் மெக்சிகோ அரசு விளக்கமளித்துள்ளது.