கிழக்கு ஆபிரிக்காவின் வரலாற்றுச் சிறப்புமிக்கது பவளத்தீவான மொசாம்பிக். இந்த நாட்டில், ’காலரா பரவுகிறது’ என தவறான தகவல் பரவியிருக்கிறது. இதையடுத்து அச்சமடைந்த மக்கள், அங்கிருந்து தப்பிக்க ஆயத்தமாகி உள்ளனர். அதற்காக, அந்நாட்டின் வடகடலோர பகுதியில் 130 பேரை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று நம்புலா மாகாணத்தில் உள்ள தீவை நோக்கி நேற்றிரவு சென்று கொண்டிருந்தது. இதற்கிடையே, படகில் போதிய இடவசதி இல்லாத சூழலில், கூட்டநெருக்கடியால் படகு கடலில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 96 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த உள்ளூர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இதில், 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. காலரா பரவும் வதந்திகளால் மக்கள் பீதியடைந்துள்ளதாகவும், இதிலிருந்து தப்பிக்கவே தீவுகளுக்குச் சென்றதாகவும், அதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாகவும் நம்புலா மாகாண செயலாளர் ஜெய்ம் நெட்டோ தெரிவித்துள்ளார்.
30 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட இயற்கை எரிவாயு நிறைந்த மொசாம்பிக்கில், 2017-ஆம் ஆண்டுமுதல் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் ஊடுருவலில் ஈடுபட்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், ஏற்பட்ட மோதலில் இருந்து தப்பிக்க முடியாமல் இதுவரை 5 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 10 லட்சம் பேர் சொந்த நாட்டைவிட்டு தப்பி வேறு பகுதிகளுக்குச் சென்றுள்ளனர்.
உலகளவில் வறுமையான நாடுகளில் ஒன்றாக அறியப்படும் மொசாம்பிக்கில், கடந்த (2023) அக்டோபர் மாதத்தில் இருந்து இதுவரை 15 ஆயிரம் காலரா பாதிப்புகள் பதிவாகி இருப்பதாகவும், இதில் 32 பேர் மரணம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.