தன்னுடைய ட்வீட்டை ரீட்வீட் செய்தவர்களில் 1000 பேருக்கு தலா 6.55 லட்சம் கொடுத்த ஜப்பான் தொழிலதிபர் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்
ஜப்பானைச் சேர்ந்த பிரபல நிறுவனமான சோசோ ஆன்லைன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி யூசகு மேசவா. கோடீஸ்வரரான யூசகு பணம் சேர்ப்பது மட்டுமல்லாமல் பல வித்தியாசமான அணுகுமுறையால் பலரது கவனத்தையும் ஈர்ப்பார். கலை, ஸ்போர்ட்ஸ் கார்கள் என பல விஷயங்களில் ஆர்வம் கொண்ட யூசகு, பணம் இல்லாத உலகம் எப்படி இருக்கும் எனவும் அவ்வப்போது கள ஆய்வுகளை மேற்கொள்வார்.
பணம் என்பது தனிமனிதனின் வாழ்வில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை தெரிந்துகொள்ள தனக்கே உரித்தான பாணியை கையாண்டு ஆச்சரியப்படுத்துவார். பணக்காரர்கள் உலகை சுற்றி வந்த நேரத்தில் நிலவுக்கு செல்ல முன்பதிவு செய்தவர் தான் யூசகு. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் நிலவுக்கு செல்லவுள்ளார் இவர். இப்படி வித்தியாசமான அணுகுமுறையாலும், ஆர்வத்தினாலும் கவனம் ஈர்க்கும் யூசகு தற்போது மீண்டும் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.
ஜனவரி 1ம் தேதி தான் செய்ய ட்வீட்டை ரீட்வீட் செய்த 1000 பேரை உத்தேசமாக தேர்வு செய்த யூசகு, அவர்களுக்கு பணத்தை வாரி இறைத்துள்ளார். மொத்தமாக ரூ.65.5 கோடியை வழங்கியுள்ளார். இது சமூகம் தொடர்பான சோதனை என கூறும் அவர், இந்தப்பணம் அந்த குறிப்பிட்ட நபர்களை எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக்கிறது என்பதை அறியும் முயற்சி என்றும் இந்த பணத்தின் தாக்கம் தொடர்ந்து ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.