மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரும் உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான பில்கேட்ஸ் தன் மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்து உள்ளார்.
தானும் மனைவி மெலின்டா கேட்சும் மேற்கொண்ட நீண்ட ஆலோசனைகளுக்கு பின் விவாகரத்து முடிவுக்கு வந்ததாக பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். 27 ஆண்டுகால திருமண உறவை முறித்துக்கொள்வதற்கான அறிவிப்பை பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் இருவரும் தனித்தனியாக அறிக்கையாக வெளியிட்டுள்ளனர்.
இருவரும் தம்பதியாக தொடர்ந்தால் தங்கள் வாழ்வில் அடுத்தக்கட்ட வளர்ச்சியை எட்ட முடியாது என கருதுவதால் இம்முடிவை எடுப்பதாக அந்த அறிக்கையில் இருவரும் தெரிவித்துள்ளனர். பில்லும் மெலிண்டாவும் சேர்ந்து லாப நோக்கமற்ற தொண்டு அமைப்பை கடந்த 21 ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். உலகெங்கும் பல்வேறு நலப்பணிகளுக்கு இந்த அமைப்பு நிதியுதவி செய்து வருகிறது. இந்த அமைப்புக்கு 3 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தனது நண்பருடன் இணைந்து 1975ஆம் ஆண்டு தொடங்கிய பில் கேட்ஸ் பின்னர் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆனார். மைக்ரோசாப்ட் நிறுவனமும் உலகின் மதிப்பு மிக்க தொழில் நிறுவனங்களில் ஒன்றாக மாறியது. இதன் பின் மனைவி மெலிண்டாவுடன் இணைந்து கடந்த சில ஆண்டுகளாக சமூக சேவை பணிகளில் பில் கேட்ஸ் ஈடுபட்டு வந்தார்.