சரி செய்யவே முடியாத தவறுகளை ஜோ பைடன் தலைமையிலான அரசு செய்து வருவதாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். பைடன் அரசின் திறமையின்மைதான் உக்ரைன் பிரச்னை தீவிரமடைய காரணம் என்றும் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். உக்ரைனில் உள்ள நிலவரத்தை கவனித்தால் அது உலகப்போருக்கு வித்திடும் அபாயம் உள்ளதாகவும் ட்ரம்ப் கூறினார்.
உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வர மேற்கத்திய நாடுகளின் அழைப்புகளை ரஷ்யா மீறியதைக் குறிப்பிட்ட டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அமெரிக்காவை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்பது "அவமானம்" என்று கூறினார். பைடனின் நிர்வாகம், இயல்பான பிரச்னை அல்ல, அது "நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்" என்று ட்ரம்ப்கூறினார்.
அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான அதிபர்களாக கருதப்படும் 5 பேர் செய்ததை விட மோசமான தவறுகளை தற்போதைய பைடன் அரசு செய்துள்ளதாகவும் ட்ரம்ப் கூறினார். அமெரிக்காவில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ள நிலையில், அதற்கு ரஷ்ய அதிபர் புதினே காரணம் என பைடன் கூறுவது நகைப்புக்கு உரிய விஷயமாக உள்ளது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட டிரம்ப் விருப்பம் தெரிவித்திருப்பதும் அமெரிக்க மக்கள் மத்தியில் பைடனுக்கு ஆதரவு வெகுவாக குறைந்து வருவது முன்னணி ஊடகங்கள் நடத்திய சமீபத்திய கருத்து கணிப்புகளில் தெரியவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.