உலகில் மர்ம தீவுப் பகுதியாக உள்ள பெர்முடா முக்கோணத்தின் வழியே செல்லும் கப்பல் காணாமல் போனால் பயணிகளுக்கு பணம் திருப்பித் தரப்படும் என விசித்திரமான விளம்பரத்தை நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.
பல்வேறு மர்மங்களை உள்ளடக்கிய இந்த உலகில் பலவற்றுக்கு ஆராய்ச்சியாளர்கள் விடை கண்டுவிட்டன. ஆனால், விடைகாணப்படாத மர்மங்களும் உள்ளன. அதில் முதன்மையானது பெர்முடா முக்கோணம். 7 லட்சம் கி.மீ பரப்பளவு கொண்ட இந்த முக்கோணத்தின் ஒரு முனை பெர்முடாவையும், மற்றொரு முனை அமெரிக்காவின் புளோரிடாவையும், அடுத்த முனை போர்டொ ரிகோவையும் தொடுகிறது.
அட்லாண்டிக் பெருங்கடலின் இந்த குறிப்பிட்ட முக்கோண வடிவிலான பரப்பளவின் மேல் செல்லும் பொருட்கள் மாயமாகி வந்ததால் அப்பகுதி பெர்முடா முக்கோணம் என்று 70 ஆண்டுகளுக்கும் மேலாக அழைக்கப்பட்டு வருகிறது. ஏராளமான கப்பல்கள், விமானங்கள், பறவைகள், இதை ஆராய்ச்சி செய்ய அப்பகுதிக்கு சென்ற விஞ்ஞானிகள் என மாயமாகிவிடுவதாக கூறப்பட்டு வருகிறது. இத்தகைய மர்மம் நிறைந்த பகுதி வழியாக கப்பலை இயக்கவுள்ளதாக லண்டனை சேர்ந்த நிறுவனமொன்று தெரிவித்துள்ளது. கப்பல் காணாமல் போகும் பட்சத்தில் நூறு சதவிகிதம் பணம் திருப்பித் தரப்படும் என விநோதமான விளம்பரத்தை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்த கப்பல் மர்ம தேசம் நோக்கி தனது பயணத்தை தொடங்கவுள்ளது. இதில் பயணிக்க ஒரு அறைக்கு ஒரு லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. உயிரை பணயம் வைத்து செல்லும் இந்த பயணம் தேவையா என பலரும் விமர்சித்து வருகின்றனர்.