விமானம் தாங்கிக் கப்பலை அனுப்பி இஸ்ரேலுக்கு கைகொடுக்கும் அமெரிக்கா.. ஹமாஸை எச்சரிக்கும் நெதன்யாகு!
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே தாக்குதல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், ஹமாசிற்கு எதிரான போர் சில காலம் நீடிக்கும் என்று பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஹமாசுடன் போர் வலுக்கும் நிலையில் இஸ்ரேலுக்கு உதவ யுஎஸ்எஸ் ஜெரால்டு ஃபோர்டு என்ற விமானம் தாங்கிக் கப்பலை அமெரிக்கா அனுப்பியுள்ளது. 5 ஆயிரம் படை வீரர்கள், ஆயுதங்கள், கண்காணிப்பு சாதனங்களுடன் இக்கப்பல் மெடிட்டரேனியன் கடல் பகுதியை நோக்கி விரைந்துள்ளது. விமானம் தாங்கி கப்பலை தவிர மேலும் சில கப்பல்கள், போர் விமானங்களை இஸ்ரேல் பகுதிக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது. இஸ்ரேலுக்கு மேலும் தேவைப்பட்டால் உலகெங்கிலும் இருந்து படைகளை திரட்டித்தந்து உதவப்போவதாக அமெரிக்க ராணுவ அமைச்சர் ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதலில் அமெரிக்கர்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே, போரை நிறுத்துவதற்காக இரு தரப்பிடமும் எகிப்து பேசி வருகிறது. ஆனால் இஸ்ரேல் பின்வாங்குவதற்கு தயாராக இல்லை என தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. போர் தற்போதைக்கு நிற்பதற்கான வாய்ப்புகள் இல்லாத நிலையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட வழிகளில் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் என அஞ்சப்படுகிறது.