அறுவை சிகிச்சையின்போது கிட்டார் வாசித்த இசைக் கலைஞர்
மூளை அறுவை சிகிச்சையின்போது சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளி, மருத்துவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்த கிட்டார் வாசித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த 32 வயது கிட்டார் இசைக்கலைஞருக்கு, கிட்டார் வாசிக்கும்போது இடது கையில் மூன்று விரல்கள் மட்டும் திடீரென நடுங்கி அவரால் வாசிக்க முடியாமல் போனது. சுமார் ஒன்றரை வருடங்களாக இந்த பாதிப்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. நாளடைவில் கிட்டார் வாசிக்க ஆரம்பித்தாலே விரல்களில் நடுக்கம் வந்துள்ளது. அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மூளையின் சில நரம்புகளின் தவறான செயல்பாட்டினால்தான் இந்த நடுக்கம் ஏற்படுகிறது எனக் கூறினர். மேலும், அவருக்கு டிஸ்டோனியா எனும் நரம்பு சம்பந்தப்பட்ட குறைபாடு இருப்பதாகவும், இதனால் விரல்களில் ஏற்படும் இந்த நடுக்கத்தை சரி செய்ய அந்தக் குறிப்பிட்ட நரம்புகளைக் கண்டறிந்து அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்கள்.
இதையடுத்து, கடந்த வாரம் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சையின்போது நோயாளியின் மண்டை ஓட்டில் 14 மிமீ துளை இடப்பட்டது. அவருக்கு வலி தெரியாத மருந்து கொடுக்கப்பட்டிருந்ததால் அவரால் வலியை உணர முடியவில்லை. மூளையில் எந்த நரம்புகளால் இந்த நடுக்கம் உண்டாகிறது என்பதைக் கண்டறிய மருத்துவர்கள் அவரை கிட்டார் வாசிக்குமாறு கேட்டுக் கொண்டனர். அவரும் வாசித்தார். அதன்பின் மருத்துவர்கள் சுமார் ஏழு மணிநேரம் அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். இப்போது அவரது விரல்கள் முழுமையாக குணமடைந்து நன்றாக கிட்டார் வாசிக்கிறார்.