2022 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக தேர்வுக்குழு அறிவித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பென் எஸ்.பெர்னாக், டக்ளஸ் டைமண்ட், பிலிப் டிவிக் ஆகிய மூன்று அறிஞர்களுக்கு இந்தாண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.
பொருளாதாரத்தில் குறிப்பாக நிதி நெருக்கடிகளில் வங்கிகளின் பங்கு என்பது பற்றிய விரிவான ஆய்விற்காக இவ்விருது வழங்கப்பட உள்ளது. வங்கிகள் திவாலாவதை தவிர்ப்பது ஏன் இன்றியமையாதது என்பது அவர்களது ஆய்வில் மிக முக்கியமான கண்டுபிடிப்பாக நோபல் தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.
நவீன வங்கியியல் ஆராய்ச்சி, நம்மிடம் ஏன் வங்கிகள் உள்ளன, அவற்றை எவ்வாறு பொருளாதார நெருக்கடிகளில் குறைவாகப் பாதிப்படையச் செய்வது மற்றும் வங்கி சரிவுகள் எவ்வாறு நிதி நெருக்கடிகளை அதிகப்படுத்துகின்றன என்பது பற்றி அந்த ஆய்வில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளதாகவும் நோபல் தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.
மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், வேதியியல், இலக்கியம், உலக அமைதி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான நோபல் பரிசு ஆண்டு தோறும் அறிவிக்கப்பட்டு வருகிறது.