இஸ்லாமிய கொள்கைகளுக்கு எதிராக இருப்பதாகக் கூறி ஸ்டைலிஷ் தாடிகளுக்கு பாகிஸ்தானின் பெஷாவர் முடி திருத்துநனர்கள் சங்கம் தடை விதித்துள்ளது.
டிரெண்டியாக தலைமுடி, தாடிகளை வைத்துக்கொள்ள இளைஞர்கள் விரும்புவது வழக்கம். அதற்கேற்ப பிரெஞ்ச் பியர்ட் உட்பட விதவிதமாக தாடிகளை வைத்துள்ளனர். ஆனால், இதற்கு பாகிஸ்தானின் பெஷாவர் மாவட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பெஷாவர் மாவட்ட சுலைமானி முடி திருத்துனர்கள் சங்கத் தலைவர் ஷரீப் ஹலி (Sharif Kahlu), கூறும்போது, விதவிதமாக தாடிகள் வைப்பது இஸ்லாமுக்கு எதிரானது என்றார்.
தலிபான் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதா என்று கேட்கப்பட்டதற்கு அவர் மறுப்புத் தெரிவித்தார்.
‘எங்கள் சங்க விருப்பத்தின் படியே இந்த முடிவை எடுத்துள்ளோம். வேறு யாரும் எங்களுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. இனி, மாவட்டம் முழுவதும் உள்ள சலூன் கடைகளில் விதவிதமான தாடிகளை வடிவமைக்க மாட்டோம். எங்கள் சங்கத்தில் உறுப்பினராக இல்லாத சலூன் கடைகளிடமும் இதைக் கடைபிடிக்க வலியுறுத்தி வருகிறோம்’ என்றார்.
கடந்த 10 வருடங்களுக்கு முன்பு தலிபான் தீவிரவாதிகள் இந்த பகுதியில் உள்ள பல சலூன் கடைகளை தாக்கினர். இஸ்லாமிய முறைபடிதான் தாடிகளை வைக்க வேண்டும் என்று மிரட்டிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘பல இஸ்லாமிய நாடுகளில் தாடிகளை விதவிதமாக வைத்துள்ளனர். இங்கு இது போன்று தடை விதிப்பது, மக்களை பின்னோக்கி அழைத்துச் செல்வதற்கு சமமானது’ என்று சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.