முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நேற்று பிறந்தநாள் கண்ட தனது மனைவி மிச்செல் ஒபாமாவுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தது 1.3 மில்லியன் லைக்குகளை தாண்டியுள்ளது.
தனது வாழ்க்கை துணை மேல் அன்பை பொழிவதில் சில கணவர்களை அடித்துக்கொள்ள முடியாது. தங்கள் 90 வயதுகளிலும் நவீன காதலர்களாக அன்பை மாறிமாறி பரிமாறிக்கொள்ளும் ஜோடிகளை பார்த்திருப்போம். அந்த வகையில், மிகவும் ‘கூலான’ அதிபர் என்று பலரால் பேசப்பட்ட ஒபாமா தனது பதவிக்குண்டான பணிகளில் சிறப்புற செயல்பட்டவர் என பெயர்பெற்றது மட்டுமின்றி, தனது மனைவிக்கு ஒரு சிறந்த ரொமாண்டிக் கணவர், தனது இரு மகள்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டி என பலராலும் புகழப்பட்டுவருபவர் ஒபாமா.
பெரும்பாலும் சமூக வலைதளங்களில் இருவரும் தங்களது பரஸ்பர அன்பை பரிமாறிக்கொள்வதால் ஒபாமாவுக்கும் மிச்செல் ஒபாமாவுக்கும் ட்விட்டர் போன்ற வலைதளங்களில் ரசிகர் பட்டாளம் உண்டு. ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்று சொல்வதுபோல் எனது ஏற்ற இறக்கங்களில் என்னை ஊக்குவித்து என்னுடன் பயணித்தது மிச்செல் என தனது காதல் மனைவிக்கு பலமுறை புகழாரம் சூட்டியிருக்கிறார்.
ஏற்கெனவே கடந்தாண்டு அக்டோபரில் ஒபாமாவின் திருமண நாளன்று தனது மனைவிக்கு கூறிய வாழ்த்தில், ’26 ஆண்டுகால திருமண வாழ்வில் என் வாழ்க்கையில் சிறந்த துணையாகவும் என்னை எப்போதும் சிரிக்கவைத்து, இந்த உலகில் சேர்ந்து வாழ மிகவும் பிடித்தமான ஒருவராக விளங்கும் உனக்கு நம் திருமண வாழ்த்துகள்’ என அழகாக வாழ்த்துகளை பகிர்ந்தது நம்மில் பலருக்கு தெரிந்திருக்கும். அதற்கு ரிப்ளை செய்யும் வகையில் மிச்செல் ஒபாமாவும், ’26 ஆண்டுகளை கடந்த நம் திருமண வாழ்வில், காதல், நம்பிக்கை, மரியாதையை தூக்கிப்பிடித்து என்னை கவுரவிக்கும் உங்களுக்கு நன்றி; வாழ்வின் ஒவ்வொரு நாளும் நான் உங்களுடன் இருப்பேன்’ என ரிப்ளை செய்திருந்ததும் இங்கே நினைவுக்கூறத்தக்கது.
அதேபோல், இந்தாண்டு முதலிலேயே அவரது ட்வீட் வைரலானது. நேற்று பிறந்தநாள் கொண்டாடிய தனது மனைவி மிச்செலுக்கு ‘நம் உன்னத வாழ்க்கை பயணம் குறித்து எனக்கு அன்றே தெரியும், அதை நினைத்து இன்று நான் மனம் மகிழ்கிறேன்; ஆயிரத்தில் ஒருத்தி நீ’ என ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து, ஒன்றாக நிற்கும் தங்களின் இளவயது புகைப்படம் ஒன்றோடு பதிவிட்டார். அந்த பதிவு கிட்டத்தட்ட 1.3 மில்லியன் லைக்குகளை தாண்டி, ஒரு லட்சத்து எழுபதாயிரத்துக்கும் மேற்பட்டோரால் ரீட்வீட் செய்யப்பட்டு வைரலானது.
ரொமாண்டிக் ஜோடியாக, பலருக்கு கணவன்-மனைவி உறவு எப்படி காதல், நம்பிக்கை, மரியாதை என அனைத்தும் கலந்து அன்யோன்யமாக இருக்க வேண்டும் என எடுத்துக்காட்டாய் வலம் வரும் ஒபாமா-மிச்செல் ஒபாமாவுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.