அமெரிக்காவில் சிலிக்கான் வேலி வங்கி திவாலாகி, மூடப்பட்டிருக்கும் நிலையில், அந்த வங்கியின் முன்னாள் சி.இ.ஓ. வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
அமெரிக்காவின் 16ஆவது மிகப்பெரிய வங்கியான கலிபோர்னியாவைச் சேர்ந்த சிலிக்கான் வேலி வங்கிக்கு (Silicon Valley Bank) ஏற்பட்ட நிதி நெருக்கடியை தொடர்ந்து வெறும் 48 மணி நேரத்தில் திவாலானதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து, கடந்த மார்ச் 10ஆம் தேதி சிலிக்கான் வேலி வங்கி மூடப்பட்டது. அதற்கு அடுத்த சில நாட்களில் ‘சிக்னேச்சர்’ வங்கி மூடப்பட்டது. தற்போது ‘பர்ஸ்ட் ரிபப்ளிக்’ வங்கியும் மூடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஒரு வாரத்தில் மூன்று பெரிய வங்கிகள் அடுத்தடுத்து மூடப்பட்டதால் அந்நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அமெரிக்க வங்கிகள் ஒன்றன்பின் ஒன்றாக மூடப்பட்டு வருவதால், கடந்த 2008ம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையை அமெரிக்கா எதிர்கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சிலிக்கான் வேலி வங்கியின் பங்குகளை அமெரிக்க மத்திய டெபாசிட் காப்பீடு நிறுவனம் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
அதேநேரத்தில், சிலிகான் வேலி வங்கியில் டெபாசிட் செய்திருந்த தொகை முழுவதற்கும் அமெரிக்க அரசு பொறுப்பேற்றுள்ளதாகவும் விரைவில் டெபாசிட்தாரர்களுக்கு பணம் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டது. இதையடுத்து, திவாலான வங்கி வாடிக்கையாளர்களின் பணத்தை மீட்க அமெரிக்க நிதிஅமைப்புகள் பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்துள்ளன. மேலும் மற்ற வங்கிகளின் வாடிக்கையாளர்கள் நலன் பாதுகாக்கப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வர்த்தக அமைப்பை மாற்றும் முதல் பணியாக சிலிக்கான் வேலி வங்கியின் சி.இ.ஓவாக டிம் மயோபோல்ஸ் (Tim Mayopoulos) என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் அடுத்த ஆறு வருடங்களுக்கு சிலிக்கான் வேலி வங்கியின் சிஇஓ ஆக பதவியில் இருப்பார் என்றும் அவர் இந்த வங்கியை வழிநடத்துவார் என்றும் கூறப்படுகிறது.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இந்த வங்கியின் முன்னாள் சி.இ.ஓ.வான கிரேக் பெக்கர், வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிலிக்கான் வேலி வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த கிரெக் பெக்கர், தன் மனைவி மர்லின் பாட்டிஸ்டாவுன் ஹவாய் தீவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாகவும், இதற்காக அவர்கள் சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்திற்குச் சென்று, அங்கிருந்து புறப்பட்ட விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்ததாகவும், அதற்குரிய படங்கள் வெளியாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. ஹவாய் தீவில் அவருக்கு 3.1 மில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 25 கோடிக்கும் மேல்) மதிப்பில் ஆடம்பர பங்களா இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
முன்னதாக கடந்த இரண்டு ஆண்டுகளில், அவர் வங்கியின் பங்குகளில் 30 மில்லியன் டாலர் அளவுக்கு விற்பனை செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான விசாரணையை அவர் விரைவில் எதிர்கொள்வார் எனவும் சொல்லப்படுகிறது. சிலிக்கான் வேலி வங்கி திவாலாகி மூடப்பட்டிருக்கும் நிலையிலும், இவ்விஷயம் அமெரிக்க பொருளாதாரச் சந்தையில் பேசுபொருளாகி இருக்கும் நிலையில், முன்னாள் சி.இ.ஓ. கிரேக் பெக்கர், தப்பிச் சென்றிருப்பது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- - ஜெ.பிரகாஷ்