சாப்பாட்டில் முடி இருந்ததால் மனைவியின் தலை முடியை வெட்டிய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வங்கதேசத்தின் வடமேற்கு பகுதியிலுள்ள ஜாய்புர்ஹட் பகுதியை சேர்ந்தவர் பப்லூ மொண்டல்(35). இவர் நேற்று காலை சாப்பிட்ட உணவில் முடி விழுந்துள்ளது. இதனையடுத்து கோபம் அடைந்த பப்லூ தனது மனைவியின் முடி முழுவதையும் கத்தியை எடுத்து வெட்டியதாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். காவல்துறையினர் பப்லூ மொண்டலை கைது செய்தனர். இது குறித்து காவல்துறை தலைவர் ஷாரியர் கான், “பப்லூ தனது காலை உணவில் முடி விழுந்திருந்ததால் தனது மனைவியின் முடி முழுவதையும் கத்தியால் வெட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து நாங்கள் அவரை கைது செய்துள்ளோம். அவர் மீது ‘தானாக கடுமையான காயத்தை ஏற்படுத்தும்’ பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பிரிவின் கீழ் அதிகபட்சமாக 14 வருடங்கள் சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை குற்றங்கள் சமீபத்தில் அதிகரித்து உள்ளதாக அந்த நாட்டின் சமூக செயல்பாட்டாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் 19 வயது பெண் உயிருடன் எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட போது பெரும் போராட்டம் வெடித்தது குறிப்பிடத்தக்கது.