வங்கதேச தலைநகர் டாக்காவில், பாகுபாடுக்கு எதிரான மாணவர் அமைப்பினர், அந்நாட்டு உச்சநீதிமன்றத்தை பேரணியாகச் சென்று முற்றுகையிட்டனர். இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான Hasnat Abdullah, உச்சநீதிமன்ற நீதிபதியும், மேல்முறையீட்டு அமர்வும் மதியம் 1 மணிக்குள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இதையடுத்து தலைமை நீதிபதி Obaidul Hassan தனது பதவி விலகல் கடிதத்தை அளித்தார். இதுதொடர்பாக, இடைக்கால அரசின் சட்ட ஆலோசகர் பேராசிரியர் Asif Nazrul பேஸ்புக்கில் உறுதிசெய்தார். அவரது ராஜினாமா கடிதத்தை அதிபருக்கு அனுப்பிவிட்டதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையே ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியினரை குறிவைத்து தாக்குதல்கள் நடந்துவருகின்றன. அவாமி லீக் கட்சியினர் பலர் சிறுபான்மையினர் என்பதால் அவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவது அதிகரித்துள்ளது. சிறுபான்மையினர் மீது வங்கதேசத்தின் 52 மாவட்டங்களில் 200க்கும் அதிக வன்முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அங்குள்ள அமைப்புகள் தெரிவிக்கின்றன. சிறுபான்மை மக்கள் அச்சத்துடன் ஒவ்வொரு கணத்தையும் கழிப்பதாக கூறுகிறார்கள்.
யூனுஸ் தலைமையில் அமைந்துள்ள இடைக்கால அரசின் முக்கிய நடவடிக்கை, வன்முறைகளை கட்டுக்குள் கொண்டுவந்து நிலைமையை சரிசெய்ய வேண்டியதாக இருக்கிறது.