கொரோனா வைரஸை எதிர்ப்பதற்காக அரசுக்கு தங்கள் பாதி சம்பளத்தை கொடுப்பதாக பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் அறிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைக்காக பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் 27 பேர் தங்கள் சம்பளத்தில் பாதித்தொகையை கொடுத்துள்ளனர். இதில் 17 பேர் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தால் ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்கள் ஆவர். மீதமுள்ள 10 வீரர்கள் சர்வதேச போட்டிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருப்பவர்கள்.
தங்கள் ஊதியத்தை கொடுத்ததுடன் கூட்டாக அறிக்கை ஒன்றையும் பங்களாதேஷ் வீரர்கள் வெளியிட்டுள்ளனர். அதில், “உலகமே கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கிறது. பங்களாதேஷிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு வந்துள்ளது. மக்கள் அனைவரும் கொரோனாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிரிக்கெட் வீரர்களாக நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்துள்ளனர்.
மேலும், “இந்த நிதி கொரோனா வைரஸ்க்கு எதிராக பங்களாதேஷ் அரசு போராட போதிய தொகையாக இருக்காது. ஆனால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து நம்மால் முடிந்த நிதியை கொடுக்கும் போது அது பெரிய தொகையாக மாறும்” என்று கூறியுள்ளனர். இந்த 27 கிரிக்கெட் வீரர்களின் பாதி சம்பளத்தை சேர்த்தால் பங்களாதேஷ் டாகா மதிப்பில் 25 லட்சம் ஆகும். இதுவரை பங்களாதேஷில் 5 பேர் கொரோனாவில் உயிரிழந்திருப்பதும், 39 பேர் பாதிக்கப்பட்டிருப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.