பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்யும் நடவடிக்கையை நாளை காலை 10 மணி வரை நிறுத்துமாறு அந்நாட்டு காவல்துறைக்கு லாகூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், வெளிநாட்டுப் பயணத்தின்போது கிடைக்கப் பெற்ற பரிசுப் பொருட்களை அரசு கருவூலத்தில் சேர்க்காமல் விற்பனை செய்திருப்பதாக தற்போதைய பாகிஸ்தான் அரசு குற்றம் சுமத்தியிருக்கிறது. இதுதொடர்பான வழக்கு விசாரணையும் நடைபெற்று வருக்கிறது. இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க இம்ரான் கானுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஆனால், இம்ரான் கான் ஆஜராகாததால், அவரை கைது செய்ய பாகிஸ்தான் போலீஸார் அவரது இல்லத்துக்கு சென்றனர்.
ஆனால் காவலர்களுக்கு முன்பு, இம்ரான் கான் இல்லத்தை அவரது ஆதரவாளர்கள் கூடினர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. இதையடுத்து, கூட்டத்தை கலைக்க போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி தடியடி நடத்தினர். இதனால் அப்பகுதியில் வன்முறை வெடித்தது. இந்த நிலையில், இம்ரான் கானை கைது செய்யும் நடவடிக்கையை நாளை காலை 10 மணி வரை நிறுத்துமாறு அந்நாட்டு காவல் துறைக்கு லாகூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, போலீசார் அங்கிருந்து கலைந்து சென்றனர். அவர்கள் சென்றபிறகு, இம்ரான் கான் முகமூடி அணிந்தபடி தொண்டர்களையும், ஆதரவாளர்களையும் சந்தித்தாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து இம்ரான் கான், “காவல் துறையினர் மீண்டும் இங்கே வருவார்கள். அவர்கள் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசுவார்கள்; பிற பொருட்களைக் கொண்டு தாக்குவார்கள். ஆனால், அவ்வாறு செய்வதற்கு அவர்களிடம் எந்த நியாயமும் இல்லை. என்னைக் கடத்தி படுகொலை செய்வதே பாகிஸ்தான் போலீஸின் நோக்கம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல், வேறொரு வழக்கில், இம்ரான் கானுக்கு எதிராக விதிக்கப்பட்ட பிடிவாரண்ட்டை ரத்து செய்த நீதிமன்றம், நாளை வரை (மார்ச் 16) கைது செய்ய தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- ஜெ.பிரகாஷ்