இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அமைச்சரவையில் அடுத்தடுத்து அமைச்சர்கள் ராஜினாமா செய்து வருவதால் பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.
இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போரிஸ் ஜான்சனின் அரசு சமீபத்திய மாதங்களில் தொடர்ச்சியான சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. கொரோனா காலத்தின் போது சட்ட விரோதமாக மது விருந்து கொடுத்தது, பாலியல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல புகார்கள் போரிஸ் ஜான்சன் மீது எழுந்தன.
முன்னதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது தங்களுக்கு இனி நம்பிக்கை இல்லை என்று கூறி அந்நாட்டின் நிதியமைச்சர் பதவியில் இருந்து ரிஷி சுனக்கும், சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து சாஜித் ஜாவித்தும் செவ்வாய்க்கிழமை அன்று பதவி விலகினர். இதனால் போரிஸ் ஜான்சனுக்கு அரசியல் அழுத்தம் அதிகரித்தது. இதற்கிடையே, போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சியில் அவருக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. கட்சியினரே தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானம் கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தது. முதலில் குற்றங்களை மறுத்த போரிஸ் ஜான்சன் பின் அதை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கோரினார். இறுதியில் தீர்மானம் தோல்வியடைந்ததால் போரிஸ் ஜான்சன் பதவி தப்பியது. இருப்பினும் அவருக்கு கட்சியில் எதிர்ப்பாளர்கள் அதிகரித்தனர்.
பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகக்கோரி அமைச்சர்கள் தொடர்ந்து ராஜினாமா செய்து வருகின்றனர். கடந்த 48 மணி நேரத்தில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் என 54 பேர் ராஜினாமா செய்து உள்ளனர். இதனால் தொடர் நெருக்கடியில் போரிஸ் ஜான்சன் சிக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து இன்று மாலை போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து அவர் இடைக்கால பிரதமராக நீடிப்பார் என்றும் அக்டோபரில் நடைபெறும் கட்சி மாநாட்டில் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதையும் படிக்கலாமே: இப்படி ஒரு பழக்கமா? ஜப்பானியரின் செயலால் அதிசயத்துப்போன நெட்டிசன்ஸ்!