'ஆஸ்திரேலியா தினம்' தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமான கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கும், அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் தரப்புக்கும் மோதல் வெடித்துள்ளது. இந்த மோதலை தெரிந்துகொள்வதற்கு முன்பாக `ஆஸ்திரேலியா தினம்' எப்படி வந்தது என்பதை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
`ஆஸ்திரேலியா தினம்' வரலாறு: ஆண்டுதோறும் ஜனவரி 26 அன்று ஆஸ்திரேலியா முழுவதும் தேசிய ரீதியாகக் கொண்டாடப்படும் நிகழ்வே ஆஸ்திரேலிய தினம். ஆஸ்திரேலிய வரலாற்றில் முக்கியமான நாளும் கூட. முதலில் இந்த நாள் விடுதலையான குற்றவாளிகளின் கொண்டாட்டமாக தொடங்கி பிற்காலத்தில் ஆஸ்திரேலியாவின் கொண்டாட்ட நாளாக மாறிவிட்டது.
இது ஆஸ்திரேலியாவில் முதன் முதலாக ஆங்கிலேயர் படை வந்திறங்கிய நாளை நினைவுகூரும் விதமாக கொண்டாடப்படுகிறது. 1788-ல் இதேநாளில் நியூ சவுத் வேல்ஸ், ஜாக்சன் கப்பல் துறைமுகத்தில் ஆளுநர் ஆர்தர் பிலிப் என்பவரால் முதலாவது ஆங்கிலேயர் படை சிட்னியில் முதன் முதல் வந்திறங்கிய தினமே ஆஸ்திரேலிய தினம் ஆகும். 'முதல் கடற்படை' அடங்க, மற்ற 11 கப்பல்கள் பிலிப்பைப் பின்தொடர்ந்தன. இந்த பிலிப் தலைமையில் 736 கைதிகளையும் 300 ராணுவ அதிகாரிகளையும் உள்ளடக்கிய 1530 பேரைத் தாங்கிய 11 கப்பல்கள் இந்த மண்ணில் காலடி வைத்தபோது தான் ஐரோப்பிய குடியேற்றம் ஆரம்பமாகியது. இந்த நாளைதான் ஆஸ்திரேலிய தினம் ஆக கொண்டாடப்படுகிறது. `ஆஸ்திரேலியா தினம்' அன்று அந்நாடு முழுவதும் ஒரு பொது விடுமுறை நாளாகும்.
முதலாவது ஆஸ்திரேலியா தினம் 1808 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டதாகவும், அப்போது ஆளுநராக இருந்த லக்லான் மக்குவாரி இவ்விழாவை அதிகாரபூர்வமாக ஆரம்பித்து வைத்தார் என்றும் அறியப்படுகிறது. எனினும், இதில் எந்த அளவுக்கு உண்மைத் தன்மை இருக்கிறது என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. எனினும், இந்த தினத்தில் கொண்டாட்டத்துக்கு பஞ்சம் இருக்காது.
Australia Day celebrations guidelines-ல் ``ஆஸ்திரேலிய தினத்தில் நாம் ஆஸ்திரேலியாவைப் பற்றி விரும்பும் அனைத்தையும் கொண்டாடுகிறோம்: நிலம், வாழ்க்கை முறை, சம வாய்ப்பு, மக்களாட்சி, சுதந்திரம், இதைவிட குறிப்பாக நம் மக்களைக் கொண்டாடுகிறோம்" என்று கொண்டாட்டங்களை விவரிக்கிறது. ஆஸ்திரேலிய வரலாற்றில் ஜனவரி 26 முக்கியமான நாளாக காலப்போக்கில் மாறிவிட்டது. 2004 ஆண்டில், கிட்டத்தட்ட 7.5 மில்லியன் மக்கள் நாடெங்கும் நிகழ்ந்த வைபவங்களில் கலந்து கொண்டனர் என்கிறது ஒரு தரவு. இந்த நாளானது விடுமுறை நாள் என்பதையும் தாண்டி ஓர் அர்த்தம் நிறைந்த நாள் என்று ஆஸ்திரேலிய மக்களில் பலர் நம்புகின்றனர்.
ஆனால், இந்த கொண்டாட்டங்கள், நம்பிக்கைகள் எல்லாம் ஒரு தரப்பினருக்கு மட்டுமே. குறிப்பாக ஆஸ்திரேலியாவின் பூர்வகுடிகள் இதனை ஒரு துக்க நாள் என்று கருதுகிறார்கள். அந்நாட்டு பூர்வகுடிகள் மற்றும் டொரஸ் ஸ்ரெயிட் தீவு மக்கள் அறிந்த ஆஸ்திரேலியா 1788 ஜனவரியோடு அழிந்துவிட்டது என்றே நினைக்கிறார்கள், வாதிடுகிறார்கள். காரணம், 1788-ல் ஆஸ்திரேலியாவில் குடியேறிய ஆங்கிலேயர்கள் பூர்வகுடிகள் நீண்ட காலமாக வைத்திருந்த நிலத்தை பிடுங்கி கொண்டனர். மேலும் அவர்களால் ஏரளமான கொடுமைகளை பூர்வகுடிகள் அனுபவித்ததாக கூறப்படுகிறது. படுகொலைகள், சமூகங்கள் ஒடுக்கி வைக்கப்படுத்தல் என்று ஆஸ்திரேலியாவின் காலனித்துவம் கொடூரமானது இன்றளவும் இதனை நினைவுகூர்கிறார்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளில், ஆஸ்திரேலிய தினத்தை மாற்றக்கோரி பூர்வகுடிகள் அரசியல் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளன. இன்றும் கூட இந்தப் போராட்டத்தில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கும் கிரிக்கெட் வாரியத்துக்கும் என்ன சம்பந்தம்?
பிரிட்டிஷ் காலனித்துவத்தின் இந்த செயல் பூர்வகுடிகளை அழிக்க வழிவகுத்தது என்றும், இந்த நாளைக் கொண்டாடுவது ஓர் உணர்ச்சியற்ற செயலாக இருக்கலாம் என்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் நிலைப்பாடு. ஆனால், ``தற்போதைய ஆஸ்திரேலியா பிரிக்கப்பட்டுள்ளது. எனவே, தேசிய ஒற்றுமையின் ஒரு நாளாக இந்த தினத்தை கொண்டாடலாம்" என்பது ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசனின் வாதம்.
சமீபத்தில், மோரிசன் ஓர் உள்ளூர் வானொலி நிலையத்திடம் பேசுகையில், கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்புக்கு விடுகின்ற செய்தி என்று, ``கிரிக்கெட்டில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனமும், அரசியலில் கொஞ்சம் குறைவான கவனம் செலுத்துங்கள். ஆஸ்திரேலியா நாள் பற்றி உங்களுக்குத் தெரியும். நாம் எவ்வளவு தூரம் வந்தோம் என்பதை ஒப்புக்கொள்வதுதான் இந்த தினம். இது ஒரு மிகச்சிறிய நாள் அல்ல" என்று ஆஸ்திரேலிய தினம் தொடர்பான கிரிக்கெட் வாரியத்தின் நிலைப்பாட்டுக்கு பதில் கொடுத்தார்.
இப்படி ஆஸ்திரேலியா தினம் எதைப் பற்றி இருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பிக் பாஷ் லீக்கிலிருந்து ஆஸ்திரேலியா தினத்தைப் பற்றிய எந்தவொரு குறிப்பையும் தவிர்ப்பதற்கான தனது முடிவில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு உறுதியாக உள்ளது. மேலும், ஜனவரி 26 அன்று நடைபெறும் சர்வதேச விளையாட்டுகளை 'ஆஸ்திரேலியா தினம்' போட்டிகளாக சந்தைப்படுத்த வேண்டாம் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா சமீபத்தில் முடிவு செய்தது. நவீன ஆஸ்திரேலியாவின் தொடக்கத்தில் இந்த நிகழ்வு ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தை நினைவுகூரும் அதேவேளையில், இது நாட்டின் பழங்குடி மக்களுக்கு காலனித்துவத்தின் அதிர்ச்சிகரமான காலத்தையும் குறிக்கிறது என்பதை ஒப்புக்கொள்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு நடவடிக்கையாக இதை கிரிக்கெட் ஆஸ்திரேலியா பார்க்கிறது.
ஆனால், பிரதமர் மோரிசன் இதை மாற்ற வேண்டும் எனக் கூறி தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். ஜனவரி 26 நிகழ்ச்சியிலிருந்து ஆஸ்திரேலியா தினத்தைப் பற்றிய குறிப்பை கைவிடுவது இரு தரப்பிலும் கடுமையான விவாதத்தைத் தூண்டியுள்ளது.
கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் குழுவில் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான மெல் ஜோன்ஸ், தேசிய பழங்குடியினர் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் இணைத் தலைவராகவும் உள்ளார். இவர் கிரிக்கெட் ஆஸ்திரேலியா முடிவு குறித்து பிரதமரிடம் பேச முன்வந்துள்ளார். இதேபோல், ஜேசன் கில்லெஸ்பி, கிரிக்கெட் வாரியத்தின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய சர்வதேச மகளிர் அணி வீரர் மேகன் ஷட், மோரிசனின் முடிவை சங்கடமாகவும், பிளவுபடுத்தும் மற்றும் உணர்ச்சியற்றதாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதேபோல் பிரதமர் மோரிசன் ஆதரவாளர்கள் கிரிக்கெட் ஆஸ்திரேலியா விளையாட்டில் மட்டும் தலையிடுங்கள் அரசியல் பிரச்சினையில் தலையிடக்கூடாது என்று வாதிட்டு வருகின்றனர். இதனால் அங்கு புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- மலையரசு