கூகுள் நிறுவனத்திற்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் ஒன்று 330 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. தனிப்பட்ட இருப்பிடத் தரவைச் (location history) சேகரிப்பதில் தவறான தகவல்களை கொடுத்து பயனாளிகளின் தனிப்பட்ட விவரங்களை பெற முயன்ற குற்றச்சாட்டில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 2017 - டிசம்பர் 2018 க்கு இடையில் சில வாடிக்கையாளர்களின் ஆண்ட்ராய்டு மொபைல் சாதனங்கள் மூலம் சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட இருப்பிடத் தரவைப் பற்றி கூகுள் தவறாக வழிநடத்தியதாக புகார் எழுந்தது. சில பயனர்கள் இருப்பிடத் தரவை பகிர வேண்டாம் என்ற ஆப்சனை தேர்வு செய்த போதும் கூகுள் அவர்களது இருப்பிட நகர்வுகளை வேறு சில செயலிகள் உதவியுடன் தொடர்ந்து கண்காணித்து வந்ததாகவும் விளம்பர வருவாயை அதிகரிக்கும் நோக்கில் கூகுள் வர்த்தக நெறிமுறைகளை மீறியதாகவும் ஆஸ்திரேலிய வர்த்தகப் போட்டி சமநிலை ஆணையம் 2 ஆண்டுகளுக்கு முன் புகார் அளித்தது.
2 ஆண்டுகள் நீடித்த விசாரணையின் முடிவில், 2 நுகர்வோர் சட்டங்க்ளை திட்டமிட்டு மீறியதாக கூறி கூகுள் நிறுவனத்திற்கு 60 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் அபராதம் அந்நாட்டு ஃபெடரல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 330 கோடி ரூபாயை அபராதத் தொகையாக செலுத்துமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.