எவ்வளவு உழைத்தாலும் போதாது, வேலை நேரம் முடிந்த பிறகும் அலுவலகம் அழைத்தால் சொந்த வேலையை புறக்கணித்துவிட்டு வரவேண்டும் போன்ற பல்வேறு விதிமுறைகளானது உலகம் முழுவதும் இருக்கும் அனைத்து தொழிலாளர்களின் பிரதான பிரச்சனையாக இருந்துவருகிறது. அலுவலகத்தில் இருக்கும் அழுத்தம் காரணமாக குடும்பத்தில் இலகுவான, இயல்பான நிலை இல்லாத சூழல் பெரும்பாலான தொழிலாளர்களின் குற்றச்சாட்டாக இருந்துவருகிறது.
இந்நிலையில் தான் உலகெங்கிலும் உள்ள பிற தொழிலாளர்கள் பொறாமை கொள்ளும் அளவிலான ஒரு சட்ட மசோதாவை ஆஸ்திரேலியா அரசு முன்மொழிந்துள்ளது. அதன்படி “துண்டிக்கும் உரிமை (Right to Disconnect)” என்ற புதிய சட்ட மசோதாவை ஆஸ்திரேலியாவின் அரசு முன்மொழிந்துள்ளது. அதற்கு ஆளும் தரப்பு மற்றும் எதிர் தரப்பு என அனைத்து தரப்பினரிடமும் இருந்து ஆதரவு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"துண்டிக்கும் உரிமை (Right to Disconnect)" என்பது ஆஸ்திரேலிய நாடாளுமன்ற மசோதாவின் கீழ் மத்திய அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட ‘தொழில்துறை உறவுகள் சட்டங்களில்’ கொண்டு வரப்படும் முக்கிய மாற்றங்களில் ஒரு பகுதியாகும். இந்த மசோதா பெரும்பான்மையான செனட்டர்களின் ஆதரவைப் பெற்றுள்ளதாக ஆளுங்கட்சியான தொழிலாளர் கட்சி தெரிவித்துள்ளது. இந்த மசோதாக்களானது சட்டமாக்கும் பொருட்டு அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
புதிய துண்டிக்கும் உரிமை (Right to Disconnect) சட்டத்தின் படி, "வேலை நேரத்திற்கு பின் அலுவலகம் அல்லது முதலாளிகளிடமிருந்து வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் ஆகியவற்றை புறக்கணிக்கும் உரிமையை தொழிலாளர்களுக்கு அளிக்கும். அலுவலக நேரம் முடிந்த பிறகு தேவையில்லாமல் தம்மைத் தொடர்புகொள்வதாகவோ அல்லது தொந்தரவு செய்வதாகவோ கருதும் ஊழியர்கள் முதலில் அலுவலகம் சார்ந்தவரிடமோ அல்லது முதலாளியிடமோ பிரச்சினையை எழுப்ப வேண்டும். தொடர்ந்து இதுபோன்ற சிக்கல் தீர்க்கப்படாமல் இருந்தால், தொழிலாளிகள் வழக்கு தொடர்ந்து நியாய வேலை ஆணையத்திற்கு (Fair Work Commission) எடுத்துச் சென்று இதுபோன்ற தொந்தரவை நிறுத்த உத்தரவிடலாம், இதற்கு முதலாளி இணங்கத்தவறினால் அவர்களுக்கோ அல்லது அலுவலகத்திற்கோ அபராதம் விதிக்கப்படும்".
தொழில்துறை உறவுகள் சட்டங்களில் அமல்படுத்தப்படும் இந்த மாற்றங்கள், தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுக்கு ஆரோக்கியமான வேலை-வாழ்க்கை என்ற இரண்டிற்குமான சமநிலையை மீட்டெடுக்கும் என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கருதுகிறார்.
மேலும் சட்டம் குறித்து பேசியிருக்கும் பிரதமர், “நாங்கள் எளிமையாகச் சொல்வது என்னவென்றால், 24 மணிநேரமும் வேலை பார்க்க ஒருவர் ஊதியம் பெறாத நிலையில், எதற்காக அவர் அலுவலகநேரம் முடிந்த பிறகும் வேலைசெய்யவேண்டும். அலுவலகநேரம் முடிந்த பிறகு ஒருவர் உங்களுக்கு ஆன்லைனிலும், மொபைல் அழைப்பிலும் கிடைக்கவில்லை என்றால் அவருக்கு அபராதம் விதிக்கப்படக்கூடாது” என்று செய்தியாளர்களிடம் அல்பானீஸ் பேசியுள்ளார்.
துண்டிக்கும் உரிமை (Right to Disconnect) சட்ட மசோதா மட்டுமல்லாமல், இயல்பான உரிமைகள் (Casual rights), கிக் பொருளாதாரம் (Gig economy), Intractable bargaining (தீர்க்க முடியாத பிரச்னைக்கு தீர்வு), சாலை போக்குவரத்து நிலைமைகள் (Road transport conditions), நுழைவு உரிமை (Right of entry) முதலிய மசோதாக்களும் அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றன.