கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வரும் ஆஸ்திரேலியா

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வரும் ஆஸ்திரேலியா
கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வரும் ஆஸ்திரேலியா
Published on

ஆஸ்திரேலியா வெற்றிகரமாக கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.  

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பது ஒரு புறம் இருந்தாலும், பல நாடுகள் அந்த பாதிப்பிலிருந்து மீண்டு வந்து நம்பிக்கையை விதைக்கின்றன. கடந்த மார்ச் 28ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் புதிதாகத் தொற்று ஏற்பட்டோர் எண்ணிக்கை 460. மே 1 ஆம் தேதி புதிதாகத் தொற்று ஏற்பட்டோர் எண்ணிக்கை வெறும் 16. ஒரு மாதகாலத்தில் மிகப்பெரிய அளவில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தியுள்ளது ஆஸ்திரேலியா.


முதல்கட்டமாக சீனாவிலிருந்து வருபவர்களுக்கு மட்டுமே தடை விதித்த ஆஸ்திரேலியா, பின்னர் அனைத்து வெளிநாட்டவர்களுக்கும் தடையை நீட்டித்தது. ஆஸ்திரேலியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க முக்கிய காரணம், ரூபி பிரின்சஸ் சொகுசு கப்பல். இந்தக் கப்பலிலிருந்து 2 ஆயிரத்து 600 பேர் எந்த பரிசோதனையும் இன்றி சிட்னி நகரில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் மட்டும் 600 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. அவர்கள் மூலம் பலருக்குப் பரவியது.

நிலைமையை உணர்ந்த பிரதமர் ஸ்காட் மாரிசன், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்துச் செயல்பட்டார். நாம் இப்போது அரசியல்வாதிகளோ எதிரிகளோ இல்லை, நாம் இப்போது ஆஸ்திரேலியர்கள் மட்டுமே எனக் கூறி அனைவரையும் ஒருங்கிணைத்து கொரோனா தடுப்பு பணிகளைத் தீவிரப்படுத்தினார். 

மார்ச் இறுதியில் பாதிப்பு அதிகரிக்கவே மத வழிபாட்டுத் தலங்கள், ஜிம்கள், சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. இதுதவிர கொரோனா பரிசோதனைகளையும் அரசு தீவிரப்படுத்தியது. சுகாதார பணியாளர்கள், வயதானவர்கள், ஹாட் ஸ்பாட் என அறியப்பட்ட பகுதிகளில் வசிப்போர் என அனைவரும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

இந்தத் தொடர் நடவடிக்கைகளால் வைரஸ் பாதிப்பைப் பெருமளவு குறைத்தது.

தற்போதைய நிலையில் குயின்ஸ்லாந்து, தெற்கு ஆஸ்திரேலியாவில் ஒரு வாரத்திற்கும் மேலாகப் புதிதாக யாருக்குமே பாதிப்பு ஏற்படவில்லை. எனவே சில மாகாணங்கள் தாமாகவே கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளன. மேற்கு ஆஸ்திரேலியாவில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்குத் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், 92 பேர் வைரஸால் உயிரிழந்துள்ளனர். 5ஆயிரத்து 720 பேர் குணமடைந்துள்ளனர்.

இதுதவிர அரசு அறிமுகப்படுத்திய COVID SAFE எனும் செயலி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்ததால் வரும் 8ஆம் தேதி அமைச்சரவையைக் கூட்டி கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து ஆலோசிக்கப்படும் எனப் பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்துள்ளார். காட்டுத்தீயின் போது மக்களின் விமர்சனத்துக்கு உள்ளான பிரதமர் ஸ்காட் மாரிசன், கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றி இழந்த செல்வாக்கைத் திரும்பப் பெற்றுள்ளார்.
[3:11 pm, 02/05/2020] ??:

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com