ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் கலந்து கொள்ளச் சென்ற உலகின் 'முதல் நிலை' வீரரான ஜோக்கோவிச்சின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து, செர்பியாவில் அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்றைய தினம் ஆஸ்திரேலியாவில், ‘தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை நாட்டிற்குள் அனுமதிக்க முடியாது’ எனக் கூறி விக்டோரிய மாகாண அதிகாரிகள் ஜோக்கோவிச்சை தடுத்தி நிறுத்தியுள்ளனர். அதைத்தொடர்ந்து ஜோக்கோவிச், விடுதி ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். அதை எதிர்த்துதான் அவர் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டங்கள் வெடித்ததை தொடர்ந்து, ‘தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததன் காரணமாகவே அவரது விசா ரத்து செய்யப்பட்டது. ஜோக்கோவிச் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் இருந்து விதிவிலக்கு பெற்றதற்கான சான்றிதழை சமர்ப்பித்தால் பிரச்னை இல்லை’ என ஆஸ்திரேலிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஜோக்கோவிச்சின் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் செர்பிய நாடாளுமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் நடவடிக்கைகளுக்கு செர்பிய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலிய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிரான வழக்கு, அந்நாட்டு நீதிமன்றத்தில் வரும் 10 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்தி: பாகிஸ்தான் அதிபருக்கு இரண்டாவது முறையாக கொரோனா