ரோஹிங்கியா இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு மியான்மர் தலைவர் ஆங் சான் சூச்சி மறுப்பு தெரிவித்துள்ளார்.
2017ஆம் ஆண்டு மியான்மரிலுள்ள ரக்கைன் மாகாணத்தில் ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாக குற்றம்சாட்டு எழுந்தது. ஐநாவும் மியான்மர் அரசு இனப்படுகொலை செய்ததாக அறிக்கை வெளியிட்டது. இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் மியான்மர் அரசு மீது காம்பியா அரசு வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில் மியான்மர் தலைவர் ஆங் சான் சூச்சி இனப்படுகொலை தொடர்பான விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது தங்கள் நாட்டின் மீதான இனப்படுகொலை குற்றச்சாட்டினை மறுத்தார். தனது அரசுக்கு எதிராக போராடியவர்கள் மீது தான் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இனப்படுகொலை நடைபெறவில்லை எனவும் கூறினார். அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரான ஆங் சான் சூச்சி இனப்படுகொலை குற்றச்சாட்டில் சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜராகி இருப்பது சர்வதேச அளவில் விவாதப் பொருளாகியுள்ளது.